வழக்கு. அதைப் போலத் தம்மை 'இருகை யானை' என்று கூறிக்கொண்டார். இருகை யானை, இல்பொருளுவமை. பேரின்பத்தை விரும்புவோர் மனத்தை அகமுகமாகச் செலுத்தி மூலப்பொருளை நாட வேண்டும் என்பார், 'கருவை யான் கண்டிலேன்' என்றும், மனத்தைப் புறத்தே செலுத்தினால் துன்பந்தான் உண்டாகும் என்பார், 'கண்ட தெவ்வமே' என்றும் கூறினார். 'கிற்றிலேன்' என்னும் சொல் எதிர்மறை வினைமுற்று. 'கிற்பன்' என்பது உடன்பாட்டு வினைமுற்று. இதனால், உலகப் பொருள்களில் மனத்தைச் செலுத்தினால் துன்பந்தான் உண்டாகும் என்பது கூறப்பட்டது. 41 உண்டொர் ஒண்பொருள் என்றுணர் வார்க்கெலாம் பெண்டிர் ஆண்அலி என்றறி யொண்கிலை தொண்ட னேற்குள்ள வாவந்து தோன்றினாய் கண்டுங் கண்டிலேன் என்னகண் மாயமே. பதப்பொருள் : ஒர் ஒண்பொருள் - ஓர் அறிவொளிப் பெரும்பொருள், உண்டு என்று - உளதென்று, உணர்வார்க்கு எலாம் - அறிந்து உன்னை நாடுவார்க்கெல்லாம், பெண்டிர் ஆண் அலியென்று - பெண்ணோ ஆணோ அலியோ என்று, அறிய ஒண்கிலை - உறுதியாக அறியக்கூடாமலிருக்கின்றாய்; ஆனால், தொண்டனேற்கு - அடியேனுக்கு, உள்ள ஆ - உள்ளபடியே, வந்து தோன்றினாய் - நீ வந்து காட்சி கொடுத்தாய், கண்டும் - உன் திருவடிக் காட்சியைப் பெற்றும், கண்டிலன் - உன்னை அனுபவிக்கப் பெற்றிலேன், என்ன கண் மாயமே - இது என்ன கண் மயக்கமாய் இருக்கின்றது! விளக்கம் : பரம்பொருள் மாற்றம் மனம் கழிய நின்றது. அது உணர்வுக்கு அனுபவமாகுமேயன்றிக் காட்சிக்குரியதன்று. அதனால், கேள்வி மாத்திரத்தால் அது எப்படியுள்ளது என்று அறிய முடியாது என்பார், 'உண்டொர் ஒண்பொருள் என்று உணர்வார்க்கெலாம் பெண்டிர் ஆண் அலி என்றறியொண்கிலை' என்றார். ஆனால், அதைத் தவத்தினால் உணரலாம் என்பதைப் புலப்படுத்த, 'தொண்டனேற்கு உள்ள வா வந்து தோன்றினாய்' என்றார். உலகப் பொருள்கள் காட்சிக்கு உரியன; அனுபவிக்கக்கூடியன. ஆனால், இறைவன் அனுபவம் ஒன்றனுக்கே உரியவன்; காட்சிக்கு உரியவனல்லன். அங்ஙனமிருந்தும் தமக்குக் காட்சியில் அகப்பட்டும் அனுபவிக்கக் கூடவில்லையே என்பார், 'கண்டுங் கண்டிலேன்' என்றார். விரைவாகத் தோன்றி மறைவது மாயாசாலப் பொருள்; இஃது அது போன்று உள்ளது என்பதற்கு, 'என்ன கண் மாயம்' என்று கூறினார்.
|