171


இதனால், காட்சிக்கு அரிய பொருளாகிய இறைவன் தவம் உடையவர்க்கு வெளிப்பட்டு அருளுவான் என்பது கூறப்பட்டது.

42

மேலை வானவ ரும்அறி யாததோர்
கோல மேஎனை ஆட்கொண்ட கூத்தனே
ஞால மேவிசும் பேஇவை வந்துபோங்
கால மேஉனை என்றுகொல் காண்பதே.

பதப்பொருள் : மேலை வானவரும் - மேலாகிய பதவிகளிலுள்ள கடவுளரும், அறியாததோர் கோலமே - அறியக்கூடாத ஒப்பற்ற திருவுருவனே, எனை ஆட்கொண்ட கூத்தனே - மிக்க தாழ்மையுடைய எளியேனை அடிமை கொண்ட கூத்தப் பெருமானே, ஞாலமே விசும்பே இவை - மண்ணும் விண்ணும் ஆகிய இவை யாவும், வந்து போம் - தோன்றி ஒடுங்குவதற்குரிய, காலமே - கால தத்துவமாயிருப்பவனே, உனை - இத்தன்மையாகிய உன்னை, காண்பது - யான் காணப்பெறுவது, என்று கொல் - எந்நாளோ!

விளக்கம் : போகத்தில் திளைப்பவர் வானவர். அவர்கள் இறைவனை அறிய மாட்டார்கள். ஆதலின், 'வானவரும் அறியாத தோர் கோலமே' என்றார். 'ஞால மேவிசும்பே' என்பவற்றிலுள்ள ஏ இரண்டும் எண்ணிடைச் சொற்கள். ஐம்பூதங்களில் ஞாலம் விண் ஆகிய இரண்டைக் கூறி ஏனைய நீர் நெருப்பு வாயுக்களாகிய மூன்றையும் உள்ளடக்கினார். இறைவன் காலதத்துவத்திற்கும் இடமாய் இருப்பதால் முக்காலத்தையும் உணரும் ஆற்றலுடையவன். ஆதலால், இறைவனைத் தாம் காணும் காலம் அவனுக்குத் தெரியுமாதலால், 'என்றுகொல் காண்பதே? என்று வினவுகிறார்.

இதனால், காலத்தையும் இறைவனே நடத்துவதால், உயிர்கள் அவனுடன் சேருங்காலத்தையும் அறிந்து சேர்த்துக்கொள்வான் என்பது கூறப்பட்டது.

43

காண லாம்பர மேகட் கிறந்ததோர்
வாணி லாப்பொரு ளேஇங்கொர் பார்ப்பெனப்
பாண னேன்படிற் றாக்கையை விட்டுனைப்
பூணு மாறறி யேன்புலன் போற்றியே.

பதப்பொருள் : காணல் ஆம் - அன்பர் கண்ணினால் காணக்கூடிய, பரமே - மேலான பொருளே, கட்கு இறந்தது - அன்பரல்லார் கண் பார்வையைக் கடந்ததாகிய, ஓர் - ஒப்பற்ற, வாள் நிலா பொருளே - பேரொளி நிலைத்த பொருளே, பாழ்நனேன் - வீணனாகிய யான், புலன் போற்றி - சுவை முதலிய ஐம்புல அவாவினை மேற்கொண்டு, இங்கு - இவ்வுலகத்தில், ஒர் பார்ப்பு என - ஒரு பறவைக் குஞ்சு முட்டையை விட்டு நீங்குதல்