போல, படிறு ஆக்கையை விட்டு - பொய்யுடம்பை விட்டு, உன்னைப் பூணும் ஆறு - மெய்யாகிய உன்னையடையும் நெறியை, அறியேன் - அறிந்திலேன். விளக்கம் : 'காணலாம் பரமே' என்றதனால், ஞானக்கண்ணினால் இறைவனைக் காணலாம் என்பதும், 'கட்கு இறந்ததோர் வாணிலாப் பொருளே' என்றதனால், ஊனக் கண்ணினால் காண முடியாத பேரொளிப் பிழம்பு என்பதும் கூறப்பட்டன. "ஊனக் கண்பாச முணராப் பதியை, ஞானக் கண்ணினிற் சிந்தை நாடி" என்ற சிவஞான போத சூத்திரம் இதற்கு விளக்கமாயுள்ளது. இறைவனது பேரொளியை இந்தச் சிறிய ஊனக்கண் காணவல்லது அன்று என்பார், 'கட்கு இறந்ததோர் வாள் நிலாப் பொருளே' என்றார். பேரொளிப் பிழம்பாய் இறைவனது வடிவத்தின் அடி முடியைத் திருமாலும் பிரமனும் தேடியும் காண முடியவில்லை என்னும் புராண வரலாறும் இதனையே வலியுறுத்தும். பறவைக்குஞ்சு பருவம் வந்ததும் முட்டையை விட்டு வெளியே செல்லுதல் போல, தாமும் இவ்வுடம்பாகிய கூட்டினை விட்டு இறைவனையடையவில்லை என்பார், 'இங்கொர் பார்ப்பென' என்ற உவமையால் விளங்க வைத்தார். திருவள்ளுவர் உடம்புக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பை, முட்டைக்கும் பறவைக் குஞ்சுக்கும் உள்ள தொடர்பொடு உவமித்தார். "குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே உடம்பொடு உயிரிடை நட்பு" என்பது அத்திருக்குறள். வாழ் + நன் என்பது வாணன் என்றாதல் போலப் பாழ் + நன் என்பது பாணன் என்றாயிற்று. 'புலன் போற்றி' என்பதற்கு, 'புலன் இன்பங்களைத் தடுத்து' என்ற பொருள் கொள்ளலும் ஒன்று. இதனால், குடம்பை தனித்தொழியப் புள் பறந்து வெளியே செல்லுதல் போல, ஆன்மா பக்குவப்பட்டு உடம்பை விடுத்து இறைவனையடைய வேண்டும் என்பது கூறப்பட்டது. 44 போற்றி என்றும் புரண்டும் புகழ்ந்தும்நின் னாற்றல் மிக்கஅன் பால்அழைக் கின்றிலேன் ஏற்று வந்தெதிர் தாமரைத் தாள்உறுங் கூற்ற மன்னதொர் கொள்கைஎன் கொள்கையே. பதப்பொருள் : போற்றி என்றும் - வணக்கம் என்றும், புரண்டும் - நிலத்தே விழுந்து புரண்டும், புகழ்ந்தும் - புகழ் பாடியும், நின்று - நின் தொண்டிலே நிலைத்து நின்று, ஆற்றல்மிக்க - திண்மை மிகுந்த, அன்பால் - பேரன்பால், அழைக்கின்றிலேன்
|