174


விளக்கம் : 'கள்ளும் வண்டும் அறா மலர்' என்றதால், அன்றலர்ந்த மலர் என்பது குறிப்பிடத்தக்கது. கொன்றை மாலை சிவனுக்குரியது. இறைவன் எல்லாப் பொருள்களோடும் கலந்திருத்தலை, எள்ளில் எண்ணெய் கலந்திருத்தலோடு உவமித்தார். எள்ளில் எண்ணெய் நீக்கமற நிறைந்திருத்தல் போல, இறைவன் நீக்கமற நிறைந்திருக்கின்றான் என்பதாம். இக்கலப்பை அத்வைதம் என்று சாத்திரங் கூறும். 'யாவுளும்' என்றதால், எல்லாப் பொருள்களிலும் என்பதையும், 'நள்ளுங் கீழுளும் மேலுளும்' என்றதால், எங்கும் என்பதையும் குறிப்பிட்டார்.

இதனால், இறைவன் உயிர்களை வலிய ஆட்கொள்ளும் அருளுடையவன் என்பது கூறப்பட்டது.

46

எந்தை யாய்எம்பி ரான்மற்றும் யாவர்க்குந்
தந்தை தாய்தம்பி ரான்தனக் கஃதிலான்
முந்தி என்னுள் புகுந்தனன் யாவரும்
சிந்தை யாலும் அறிவருஞ் செல்வனே.

பதப்பொருள் : எந்தை - எம் தந்தையும், யாய் - எம் அன்னையும், எம்பிரான் - எமது தலைவனுமாகி இருப்பவன், மற்றும் யாவர்க்கும் - மற்றைய எல்லோருக்குமே, தந்தை - தந்தையும், தாய் - தாயும், தம்பிரான் - தலைவனும் ஆவன்; ஆனால் தனக்கு அஃது இலான் - தனக்குத் தந்தையும் தாயும் தலைவனும் உள்ள அந்நிலைமை இல்லாதவன், யாவரும் - எல்லாரும், சிந்தையாலும் - மனத்தாலும், அறிவு அரு - அறிதற்கு அருமையாகிய, செல்வன் - பேரானந்தச் செல்வத்தையுடையவன், முந்தி - தானே முற்பட்டு, என் உள் புகுந்தனன் - என் மனத்தே புகுந்தருளினான்.

விளக்கம் : பிறப்பு இறப்பு உடையவர்கள் மக்கள் தேவர் முதலியோர்; ஆதலின், இறைவன் உயிர்களுக்குத் தந்தை தாய் தலைவனாய் உள்ளான் என்பார், 'யாவர்க்கும் தந்தை தாய் தம்பிரான் என்றார். ஆனால், இறைவனுக்குப் பிறப்பு இறப்பு இல்லையாதலின், 'தனக்கு அஃதிலான்' என்றார். சிந்தையாலும் என்றமையால் வாக்கு, காயங்களினாலும் தொடர முடியாதவன் என்பது பெறப்பட்டது.

இறைவன் தம் நெஞ்சத்தில் புகுந்தருளியது அவனது கருணையினாலேதான் என்பார், 'முந்தி என்னுள் புகுந்தனன்' என்றார்.

இதனால், இறைவன் உயிர்களுக்குத் தந்தை தாய் தலைவனாயிருந்து அருள் புரிகிறான் என்பது கூறப்பட்டது.

47