எழுதப்படும். ஆகையால், அகர உகரங்களை, 'எட்டும் இரண்டும்' என்றார். அகரம் சிவனைக் குறிக்கும்; உகரம் சத்தியைக் குறிக்கும். சிவம் சத்திகளை அறியாத என்னை என்பதைக் குறிப்பிடுவார், 'எட்டினோடிரண்டும் அறியேனையே' என்றார். இனி, 'எட்டினோடு இரண்டும்' என்றதற்குப் பத்து என்றும், அதாவது, ய - உயிர் என்றும் பொருள் கூறுதல் உண்டு. அ, உ என்னும் எழுத்தையும் கல்லாதவர் என்ற பொருளும் உண்டு. 'பட்டி மன்றம்' என்றதற்கு வாதசபை என்றும் பொருள் கொண்டு, 'அறிவில்லாத என்னை அறிஞர் அவையிலே ஏறச் செய்தாய்' என்று கூறுதலும் ஒன்று. இதனால், இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட உயிர், ஒன்றுக்கும் பற்றாத சிறுமையுடைதாயிருந்தும் பெருமை பெறும் என்பது கூறப்பட்டது. 49 அறிவ னேஅமு தேஅடி நாயினேன் அறிவ னாகக்கொண்ட டோஎனை ஆண்டது அறிவி லாமையன் றேகண்ட தாண்டநாள் அறிவ னோஅல்ல னோஅருள் ஈசனே. பதப்பொருள் : அறிவனே - முற்றறிவுடையவனே, அமுதே - அமிர்தமே, ஆண்ட நாள் - என்னை நீ ஆட்கொண்டருளிய நாளில், அடி நாயினேன் - அடிமையாகிய நாயனையேன், அறிவன் ஆக கொண்டோ - நினது உரையை அறிய வல்லவ னென்று கருதியோ, என்னை ஆண்டது - என்னை ஆட்கொண்டது, அறிவிலாமையன்றே கண்டது - அறிவில்லாமை யன்றோ அப்பொழுது என்பால் நீ கண்டது? ஆதலின், இனி, அறிவனோ - நினது உரையை அறிந்து முன்னேறுவேனோ, அன்றி, அல்லனோ - பின்னிடுவேனோ, ஈசனே - அருள் ஆண்டவனே அருள் செய்ய வேண்டும். விளக்கம் : உண்மைப் பொருளை இறைவன் உணர்த்தினாலன்றி உயிர்கள் தாமாக உணரமாட்டா என்பது பற்றியே இறைவன் பக்குவம் அடைந்த உயிர்கட்குக் குருவாகி வந்து உணர்த்துகின்றான் என்பதைக் குறிக்க, 'அறிவனாகக் கொண்டோ எனை ஆண்டது; அறிவிலாமை யன்றே கண்டது' என்றார். குருவாய் வந்து உபதேசித்த உண்மைப் பொருளைச் சிந்தித்துத் தெளிந்து பயனடைய வேண்டும் என்பார், 'அறிவனோ அல்லனோ அருள்' என்றார். இதனால், இறைவன் அறிவே வடிவமானவனாதலால், உயிர்களின் அறியாமையை நீக்கி ஆட்கொள்ளும் தன்மையன் என்பது கூறப்பட்டது. 50
|