177


6. அனுபோக சுத்தி

அதாவது, சிவானுபவத்தினால் ஆன்மா தன்னைத் தூய்மைப் படுத்திக்கொள்ளுதலாம்.

ஈச னேஎன் எம்மானே எந்தை பெருமான் என்பிறவி
நாச னேநான் யாதுமொன் றல்லாப் பொல்லா நாயான
நீச னேனை ஆண்டாய்க்கு நினைக்க மாட்டேன் கண்டாயே
தேச னேஅம் பலவனே செய்வ தொன்றும் அறியேனே.

பதப்பொருள் : ஈசனே - எல்லாமுடையவனே, என் எம்மானே - என் தலைவனே, எந்தை பெருமான் - எம் தந்தையாகிய பெரியோனே, என் பிறவி நாசனே - எனது பிறப்பினை ஒழிப்பவனே, யாதும் ஒன்று அல்லா - ஒரு சிறு பொருளுக்கும் ஈடாகாத, பொல்லா - தீய, நாயான - நாய் போன்ற, நீசனேனை - இழிவினையுடையேனை, ஆண்டாய்க்கு - ஆண்டருளின் உன்னைக் குறித்து, நான் நினைக்க மாட்டேன் - யான் சிந்திக்க மாட்டேன்; தேசனே - ஒளியுருவானவனே, அம்பலவனே - திருவம்பலமுடையவனே, செய்வது - செய்யக் கடவதை, ஒன்றும் அறியேன் - சிறிதும் அறியமாட்டேன்.

விளக்கம் : அருள் பெற்ற நிலைக்கேற்றவாறு நடக்காது கீழ்ப்பட்டமை கருதி, 'நீசனேனை' என்றார். 'நன்றி மறப்பது நன்றன்று' என்பது நீதிநூல். நான் நன்றி மறந்தவன்' என்பார், 'ஆண்டாய்க்கு நினைக்க மாட்டேன்' என்றார். 'கண்டாய்' என்பது முன்னிலை அசை. 'இன்னது செய்வது என்று அறியும் அறிவில்லாத என்னை அறிவு வடிவமாகிய நீயே நல்வழியிற்செலுத்தி உய்விக்க வேண்டும்' என்பார், 'தேசனே அம்பலவனே செய்வதொன்றும் அறியேன்' என்றார்.

இதனால், இறைவன் செய்த பேருதவியை இடையறாது நினைத்து ஆன்மாவைத் தூய்மை செய்துகொள்ள வேண்டும் என்பது கூறப்பட்டது.

51

செய்வ தறியாச் சிறுநாயேன் செம்பொற் பாத மலர்காணாப்
பொய்யர் பெறும்பே றத்தனையும் பெறுதற் குரியேன் பொய்யில்லா
மெய்யர் வெறியார் மலர்ப்பாதம் மேவக் கண்டுங் கேட்டிருந்தும்
பொய்ய னேன்நான் உண்டுடுத்திங் கிருப்ப தானேன் போரேறே.

பதப்பொருள் : போர் ஏறே - போர் செய்தலில் வல்ல ஆண்சிங்கத்தையொப்பவனே, பொய் இல்லா - பொய்யற்ற, மெய்யர் - உண்மை அடியார்கள், வெறி ஆர் - மணம் நிறைந்த, மலர் - தாமரை மலர் போன்ற, பாதம் - உன் திருவடிகளை, மேவ - பொருந்த, கண்டும் - கண்ணாரப் பார்த்தும், கேட்டிருந்தும் - செவியாரக் கேட்டிருந்தும், பொய்யனேன் நான் - பொய்யினையுடையேனாகிய யான், உண்டு - வயிறார உண்டு, உடுத்து - இடையார உடுத்து, இங்கு - இந்தப் பொய்யுலகத்தில்,