றிளமென் முலையாளோடுடன் வந்து' என்றார். திருவருள் நிரம்ப உண்டு என்ற குறிப்பும் உள்ளது. 'அருள் பெற்ற சீரேறடியார்' என்றமையால், சிறப்புப் பெறுவதற்கு அருள் காரணம் என்பதாயிற்று. ஊர்க்காளை, தலைவன் இல்லாதது; பாதுகாவல் அற்றது. கண்ணும் இல்லையென்றால் அது தானேயும் இரை தேட முடியாது; இரை இடுவாரும் இல்லையாய் உழல வேண்டும். அதைப் போலத் தாம் உழல வேண்டுமோ என்பார், 'ஊரேறாயிங் குழல்வேனோ' என்றார். 'ஊர் ஏறு' என்றது கோயிற்காளையை. உயிர் நீங்கினால் இறைவனடி சேரலாம், ஆயினும், அதுவும் நீங்கவில்லை என்று இரங்குவார், 'உயிர்தான் உலவாதே' என்றார். இதனால், இறைவனடி சேர்ந்தார் இன்பம் அனுபவிப்பார் என்பதும், சேராதார் துன்பம் அனுபவிப்பார் என்பதும் கூறப்பட்டன. 53 உலவாக் காலந் தவமெய்தி உறுப்பும் வெறுத்திங் குனைக்காண்பான் பலமா முனிவர் நனிவாடப் பாவி யேனைப் பணிகொண்டாய் மலமாக் குரம்பை இதுமாய்க்க மாட்டேன் மணியே உனைக்காண்பான் அலவா நிற்கும் அன்பிலேன் என்கொண் டெழுகேன் எம்மானே. பதப்பொருள் : எம்மானே - எம்பெருமானே, உலவாக்காலம் - அளவிறந்த காலம், தவம் எய்தி - தவத்தை மேற்கொண்டு, உறுப்பும் வெறுத்து - உடம்பை ஒரு பொருளாகப் போற்றாது வெறுத்து, இங்கு - இவ்வுலகில், உனைக் காண்பான் - உன்னைக் காணும்பொருட்டு, பலமாமுனிவர் - பல பெரிய முனிவர், நனிவாட - மிகவும் வருந்தி நிற்க, அவர்களை ஆட் கொள்ளாது, பாவியேனை - பாவியாகிய என்னை, பணி கொண்டாய் - ஆட்கொண்டருளினை, மணியே - மாணிக்கமே, உனைக் காண்பான் - உன்னைக் காணும்பொருட்டு, மலம் - மாசு நிறைந்த, மாகுரம்பை - பெரிய உடலாகிய, இது - இதனை, மாய்க்கமாட்டேன் - வெறுத்துப் போக்க மாட்டேன், அலவா நிற்கும் - தேடி அலையும், அன்பு இலேன் - அன்பில்லாதவன் ஆனேன்; என் கொண்டு - இனி எந்நெறியைக் கொண்டு, எழுகேன் - உயர்வேன். விளக்கம் : உறுப்பு வெறுத்தலாவது, வேனிற்காலத்தில் தீயிலும், குளிர்காலத்தில் நீரிலும் நின்று உடற்குறும் நோயினைப் பொறுத்தலாம். 'உற்ற நோய் நோன்றல்' என்றார் திருவள்ளுவரும். அங்ஙனம் தாம் செய்யவில்லை என்பார், 'மலமாக் குரம்பையிது மாய்க்க மாட்டேன்' என்றார். அதற்குப் பேரன்பு வேண்டும். அது தம்மிடம் இல்லை என்பார், 'அலவாநிற்கும் அன்பிலேன்' என்றார்.
|