180


இதனால், உடலுக்கு வரும் துன்பத்தினையும் பொருட்படுத்தாது தவநெறியை மேற்கொள்ள வேண்டும் என்பது கூறப்பட்டது.

54

மானேர் நோக்கி உமையாள் பங்கா வந்திங் காட்கொண்ட
தேனே அமுதே கரும்பின் தெளிவே சிவனே தென்தில்லைக்
கோனே உன்றன் திருக்குறிப்புக் கூடு வார்நின் கழல்கூட
ஊனார் புழுக்கூ டிதுகாத்திங் கிருப்ப தானேன் உடையானே.

பதப்பொருள் : மான் நேர் நோக்கி - மான் போன்ற பார்வையுடையவளாகிய, உமையாள் - உமையவளை, பங்கா - இடப்பக்கத்தில் உடையவனே, இங்கு வந்து - இந்நிலவுலகிலே வந்து, ஆட்கொண்ட - என்னை ஆட்கொண்டருளின, தேனே - தேன் போல்வானே, அமுதே - அமுதத்தையொப்பவனே, கரும்பின் தெளிவே - கரும்பின் தெளிவை நிகர்ப்பவனே, சிவனே - மங்கலப் பொருளானவனே, தென்தில்லைக்கோனே - தெற்கேயுள்ள தில்லைநகர்க்கி்றைவனே, உடையானே - முதல்வனே, உன்றன் திருக்குறிப்புக் கூடுவார் - உன்னுடைய திருவுள்ளப் பாங்கினை உணர்ந்தோர், நின்கழல் கூட - திருவடியைக் கூடவும் யான், ஊன் ஆர் - மாமிசம் பொருந்திய, புழுக் கூடு - புழு நிறைந்த கூடாகிய, இது - இவ்வுடம்பை, காத்து - பாதுகாத்து, இங்கு இருப்பது ஆனேன் - இவ்வுலகத்தில் இருப்பவனாயினேன்.

விளக்கம் : அம்மையப்பன் உருவமே உலகினர்க்கு அருள் செய்யும் திருமேனியாதலின், 'மானேர் நோக்கி உமையாள் பங்கா' என்றார். இறைவன் இனிக்கும் தன்மையன் ஆதலின், 'தேனே அமுதே கரும்பின் தெளிவே' என்று சுவையுடைப் பொருள்களை உவமை காட்டினார்.

உயிர்களோடு பிரியாது கலந்திருத்தலே இறைவனது திருக்குறிப்பாகும். "உடையான் அடிநாயேனைத் தினையின் பாகமும் பிரிவது திருக்குறிப்பன்று" (திருச்சதகம் 37) என்ற அடிகளாலும் இவ்வுண்மை விளங்கும். அக்குறிப்பை உணர்ந்தோர் இறைவனது கழலைச் சேர்ந்தார் என்பார், 'உன்றன் திருக்குறிப்புக் கூடுவார் நின் கழல் கூட' என்றார். அக்குறிப்பை உணராமையினால் பிரிந்து இவ்வுடலை ஓம்புகின்றேன் என்பார், 'ஊனார் புழுக்கூடிதுகாத்திங் கிருப்ப தானேன்' என்றார்.

இதனால், இறைவன் பக்குவப்பட்ட உயிர்களுக்கு, வீடு பேறு நல்கித் தன்னோடு சேர்த்துக்கொள்வான் என்பது கூறப்பட்டது.

55

உடையா னேநின் றனையுள்கி உள்ளம் உருகும் பெருங்காதல்
உடையார் உடையாய் நின்பாதம் சேரக் கண்டிங் கூர்நாயிற்
கடையா னேன்நெஞ் சுருகாதேன் கல்லா மனத்தேன் கசியாதேன்
முடையார் புழுக்கூ டிதுகாத்திங் கிருப்ப தாக முடித்தாயே.