பதப்பொருள் : உடையானே - முதல்வனே, நின்றனை உள்கி - உன்னை நினைந்து, உள்ளம் உருகும் - மனம் உருகுகின்ற, பெருங்காதல் உடையார் - பேரன்புடைய அடியார்கள், உடையாய் நின் பாதம் - எல்லாவற்றையும் உடைய உன் திருவடியை, சேரக் கண்டு - அடைந்ததைப் பார்த்திருந்து, இங்கு - இவ்வுலகில், ஊர் நாயின் - ஊரில் ஆதரவின்றி அலையும் நாயினும், கடையானேன் - கீழ்ப்பட்டவனும், நெஞ்சு உருகாதேன் - மனம் உருகாதவனும், கல் ஆம் மனத்தேன் - கல்லை நிகர்த்த மனத்தையுடையவனும், கசியாதேன் - கனிந்து கண்ணீர் விடாதவனும் ஆகிய யான், முடை ஆர் - புலால் நாற்றம் பொருந்திய, புழுக்கூடு - புழு நிறைந்த கூடாகிய, இது - இவ்வுடலை, காத்து - பாதுகாத்துக்கொண்டு, இங்கு இருப்பதாக - இவ்விடத்தே இருக்க வேண்டுமென்று, முடித்தாய் - முடிவு செய்துவிட்டாய். விளக்கம் : உள்ளம் உருகிப் பேரன்பு கொண்ட அடியார்களை இறைவன் ஏற்றுக்கொண்டான் என்பார், 'உள்ளம் உருகும் பெருங்காதல் உடையார் நின்பாதம் சேர' என்றார். இறைவனை அடைவதற்குரிய பெருங்காதல் தம்மிடம் சிறிதும் இல்லாமையினால் தம்மை இங்கே நிறுத்திப் போயினான் என்பார், 'புழுக்கூடியது காத்திங்கிருப்பதாக முடித்தாயே' என்றார.் நாய்ப்பிறப்பு இழிவானது. அதுவும் தலைவனின்றித் திரியும் நாய் மிகவும் இழிவுடையது. அதனினும் கீழ்ப்பட்டவன் என்பார், 'ஊர் நாயிற் கடையானேன்' என்றார். இதனால், இறைவன் பக்குவப்பட்ட அடியார்களை ஏற்றுக் கொள்வான் என்பதும், பக்குவமில்லாதவர்களைப் பக்குவம் வரும்வரை உலகில் இருத்துவான் என்பதும் கூறப்பட்டன. 56 முடித்த வாறும் என்றனக்கே தக்க தேமுன் அடியாரைப் பிடித்த வாறும் சோராமற் சோர னேனிங் கொருத்திவாய் துடித்த வாறும் துகிலிறையே சோர்ந்த வாறும் முகங்குறுவேர் பொடித்த வாறும் இவையுணர்ந்து கேடென் றனக்கே சூழ்ந்தேனே. பதப்பொருள் : முன் - முன்னே, அடியாரை - பெருங்காதலுடைய அடியாரை, சோராமல் பிடித்தவாறும் - தளரவிடாமல் பற்றிக்கொண்டதும், என்றனக்கு முடித்தவாறும் - என்னை இங்கே காத்திறுக்குமாறு முடிவு செய்ததும், தக்கதே - பொருத்தமே; சோரனேன் - கள்ளனாகிய நான், இங்கு - இவ்விடத்தில், ஒருத்தி வாய் துடித்தவாறும் - ஒரு பெண்ணின் இதழ் துடித்த வகையும், துகில் இறை சேர்ந்தவாறும் - ஆடை சிறிது நழுவிய வகையும், முகம் குறுவேர் பொடித்தவாறும் - முகத்தில் சிறிய வியர்வை அரும்பிய வகையும், இவை உணர்ந்து - ஆகிய இவையெல்லாம் என்பொருட்டு நிகழ்ந்தனவாக உணர்ந்து, என்றனக்கே கேடு சூழ்ந்தேன் - எனக்கே கேடு சூழ்ந்துகொண்டேன்.
|