182


விளக்கம் : பக்குவப்பட்ட அடியாரை ஏற்றுக்கொண்டதும் பக்குவப்படாமையால் தம்மை இங்கே இருத்தியதும் பொருத்தமானது என்பார் 'தக்கதே' என்றார். இறைவனை நாட வேண்டியவர் பெண்ணை நாடினமையால், தம்மைச் 'சோரனேன்' என்றார். தாம் இறைவனையடையாமல் பின்தங்கினமையால் உலகப் பற்றுகள் தம்மைப் பற்றிக்கொண்டன. அவற்றால் தமக்குக் கேடு உண்டாயிற்று என்பார், 'கேடென் றனக்கே சூழ்ந்தேனே' என்றார்.

உலகப் பற்றுகள் மூன்று: அவை மண், பெண், பொன் என்பன. அவற்றில் இடையில் நின்ற பெண்ணாசை உயிருக்கே தீமை புரிவது. இராவணன் முதலியோர் வரலாறு இவ்வுண்மையினை மெய்ப்பிக்கும். இதனை மனங்கொண்டு பெண்ணாசையை இங்குக் குறிப்பிட்டார். இது, இறைவனை அடையாத பிறர் இயல்பைத் தம்மேல் ஏற்றிக் கூறிக்கொண்டதாகும். வாய் துடித்தல், துகில் சோர்தல், முகங்குறுவேர் பொடித்தல் ஆகியவை காம வயப்பட்டாரின் மெய்ப்பாடுகளாம்.

இதனால், உலகப் பற்றுகள் இறைவனை அடைதற்குத் தடையாகும் என்பது கூறப்பட்டது.

57

தேனைப் பாலைக் கன்னலின் தெளிவை ஒளியைத் தெளிந்தார்தம்
ஊனை யுருக்கும் உடையானை உம்ப ரானை வம்பனேன்
நானின் னடியேன் நீயென்னை ஆண்டா யென்றால் அடியேற்குத்
தானுஞ் சிரித்தே அருளலாந் தன்மை யாமென் றன்மையே.

பதப்பொருள் : தேனை - தேனை, பாலை - பாலை, கன்னலின் தெளிவை - கருப்பஞ்சாற்றின் தெளிவை, ஒளியை - ஒளிப்பிழம்பை, தெளிந்தார்தம் - மனந்தெளிந்தவரது, ஊனை உருக்கும் - உடலை உருகச் செய்கின்ற, உடையானை - முதல்வனை, உம்பரானை - சிவபுரத்தரசனை நோக்கி, வம்பனேன் - வீணனாகிய அடியேன், நான் நின் அடியேன் - நான் உன் அடியவன் என்றும், நீ என்னை ஆண்டாய் என்றால் - நீ என்னை ஆண்டவன் என்றும் சொன்னால், (அதைக் கேட்டு) அடியேற்கு - அடியேனுக்கு, தானும் சிரித்து அருளலாம் தன்மை ஆம் - அவனும் நகைத்து அருள் செய்வதற்குரிய தன்மையாம், என் தன்மை - எனது நிலைமை.

விளக்கம் : இறைவன் இனிமை பயப்பவனாதலின், 'தேனைப் பாலைக் கன்னலின் 'தெளிவை' என்றார்; ஒளியுடைப் பொருளாதலின், 'ஒளியை' என்றார்; உலகத்தையுடையவனாதலின், 'உடையானை' என்று கூறினார். உம்பரானை என்றதற்குக் காமதேனுவை என்ற பொருளும் கொள்ளலாம். இறைவனுக்கு நான் அடியேன் என்று கூறிக்கொள்ளத் தமக்கு ஒரு தகுதியும்