இன்மையால், 'வம்பனேன்' என்றார். இந்நிலையில் இறைவன் தம்மை ஆண்டான் என்று கூறுவது இறைவன் நகைத்தற்குரியது என்பார், 'தானும் சிரித்தே' என்றும், எனக்குத் தகுதியில்லையாயினும் எனது எளிமை நோக்கி அவன் அருள் செய்வான் என்பார், 'அருளலாந் தன்மை யாமென் தன்மையே' என்று கூறினார். இதனால், தகுதி இல்லாத உயிர்களையும் இறைவன் கருணையினால் ஆட்கொள்வான் என்பது கூறப்பட்டது. 58 தன்மை பிறரால் அறியாத தலைவா பொல்லா நாயான புன்மை யேனை ஆண்டையா புறமே போக விடுவாயோ என்னை நோக்கு வார்யாரே என்நான் செய்கேன் எம்பெருமான் பொன்னே திகழுந் திருமேனி எந்தாய் எங்குப் புகுவேனே. பதப்பொருள் : தன்மை - உன்னுடைய இயல்பு, பிறரால் அறியாத - பிறர் ஒருவராலும் அறியப்படாத, தலைவா - தலைவனே, பொல்லா நாய் ஆன - தீய நாய் போன்ற, புன்மையேனை - சிறியேனாகிய என்னை, ஆண்டு - ஆட்கொண்டு, ஐயா - ஐயனே, புறமே போக விடுவாயோ - புறத்தே செல்ல விடுவாயோ? என்னை நோக்குவார் யார் - அடியேனைப் பார்த்துக்கொள்வார் வேறு யாவர்? நான் என் செய்கேன் - நான் யாது செய்வேன்? எம்பெருமான் - எம் பெரியோனை, பொன் திகழும் - பொன் போல விளங்கும், திருமேனி - திருவுருவமுடைய, எந்தாய் - எந்தையே, எங்குப் புகுவேன் - நான் எவ்விடத்தில் அடைக்கலம் புகுவேன்? விளக்கம் : இறைவனது இயல்பு முற்றிலும் ஒருவராலும் அறியப்படாதது ஆதலின், 'தன்மை பிறரால் அறியாத தலைவா' என்றார். ஆளாது புறம் போக விடுதல் பொருந்தும். ஆண்டு புறம் போக விடுதல் பொருந்தாது என்பார், 'ஆண்டு ஐயா புறமே போக விடுவாயோ? என்றார். ஆண்டு புறக்கணிப்பின் கடைக் கணிப்பார் யார் என்பார், 'என்னை நோக்குவார் யாரே?' என்றார். இறைவன் திருவடியன்றிப் புகலிடம் வேறு இன்று என்பார், 'எங்கு புகுவேன்!' என்று இரங்கிக் கூறுகிறார். இதனால், ஆட்கொள்ளப்பட்ட அடியார்களுக்கு இறைவன் திருவடியையன்றி வேறு பொருள் இல்லை என்பது கூறப்பட்டது. 59 புகுவேன் எனதே நின்பாதம் போற்றும் அடியா ருள்நின்று நகுவேன் பண்டு தோள்நோக்கி நாண மில்லா நாயினேன் நெகுமன் பில்லை நினைக்காண நீஆண் டருள அடியேனுந் தகுவ னேஎன் தன்மையே எந்தாய் அந்தோ தரியேனே. பதப்பொருள் : எந்தாய் - என் தந்தையே, பண்டு - என்னை ஆட்கொண்ட நாளில், நாணம் இல்லா நாயினேன் - வெட்கம்
|