184


இல்லாத நாய் போன்றவனாகிய யான், போற்றும் - உன்னை வணங்குகின்ற, அடியாருள் நின்று - அடியார் நடுவில் நின்று, தோள் நோக்கி - உன் திருத்தோள்களின் அழகை நோக்கி, நகுவேன் - மகிழ்தல் ஒன்றுமே செய்யேனாயினேன்; நினைக் காண - உன்னைப் பார்ப்பதற்கு, நெகும் - உள்ளம் உருகுகின்ற, அன்பு இல்லை - அன்போ இல்லை; (அதனால்) நீ ஆண்டருள - நீ ஆண்டருளுதற்கு, அடியேனும் தகுவனே - அடியேனும் தகுதியுடையவனாவேனோ? (ஆயினும் என்னை ஆட்கொண்டாய்) என் தன்மை தரியேன் - இப்படிப்பட்ட தன்மையை நான் பொறுக்க மாட்டேன்; அந்தோ - ஐயோ, நின்பாதம் எனதே - உன்னுடைய திருவடி எனக்கு உரியதே; புகுவேன் - அதில் சேர்வேன்.

விளக்கம் : இறைவன் திருவடியில் தமக்கு உள்ள உரிமை பற்றி, 'எனதே நின்பாதம்' என்றார். இறைவன் குருவாய் வந்த பொழுது அவனது தோற்றப் பொலிவைக் கண்டும் மகிழ்ந்து நின்றதேயன்றி ஞானத்தைப் பெற்று அன்பு செய்யவில்லை என்பார், 'பண்டு தோள் நோக்கி நகுவேன்' என்றார். தம்மியல்பு எவ்வாறிருந்த போதிலும் தாம் திருவடியைப் பிரிந்து வாழ முடியாது என்பார், 'தரியேன்; புகுவேன்' என்றார்.

இதனால், இறைவன் திருவடிக்காட்சிக்கு இலாக்காயினோர், அதனைப் பிரிந்து வாழ ஒருப்படார் என்பது கூறப்பட்டது.

60

7. காருணியத்திரங்கல்

காருணியத்திரங்கல் என்பது இறைவன் கருணையைக் குறித்து இரங்குதலாம்.

தரிக்கிலேன் காய வாழ்க்கை சங்கரா போற்றி வான
விருத்தனே போற்றி எங்கள் விடலையே போற்றி ஒப்பில்
ஒருத்தனே போற்றி உம்பர் தம்பிரான் போற்றி தில்லை
நிருத்தனே போற்றி எங்கள் நின்மலா போற்றி போற்றி.

பதப்பொருள்: காய வாழ்க்கை - உடலோடு கூடி வாழும் வாழ்க்கையை, தரிக்கிலேன் - பொறுக்கமாட்டேன், சங்கரா - இன்பத்தைச் செய்கின்றவனே, போற்றி - வணக்கம்; வானம் - சிதாகாயத்தில் உறையும், விருத்தனே - பழையோனே, போற்றி - வணக்கம்; எங்கள் விடலையே போற்றி - எம் திண்ணியனே வணக்கம்; ஒப்பு இல் ஒருத்தனே போற்றி - நிகரற்ற ஒருவனே வணக்கம்; உம்பர் தம்பிரான் போற்றி - தேவர் தலைவனே வணக்கம்; தில்லை நிருத்தனே போற்றி - திருத்தில்லையில் நடம் புரிவோனே வணக்கம்; எங்கள் நின்மலா - உம் தூயோனே, போற்றி போற்றி - வணக்கம் வணக்கம்.