185


விளக்கம் : போற்றி என்பதற்குக் காக்க என்ற பொருளும் கொள்ளலாம். சம் - சுகம், கரன் - செய்பவன். காய வாழ்க்கை துன்பமானது. துன்பத்தைப் போக்கி இன்பம் தர வல்லவனாதலின், இறைவன் 'சங்கரன்' எனப்பட்டான். சிதாகாசத்தில் சூக்குமமாய் விளங்கும் இறைவன் தில்லை மன்றில் வெளிப்படையாக நடம்புரிகின்றான் என்பதை விளக்க, 'வான விருத்தனே' என்றும், 'தில்லை நிருத்தனே' என்றும் கூறினார்.

இதனால், இறைவனே காயத்தோடு கூடிய துன்ப வாழ்க்கையை ஒழித்து இன்பத்தை நல்க முடியும் என்பது கூறப்பட்டது.

61

போற்றியோ நமச்சி வாய புயங்கனே மயங்கு கின்றேன்
போற்றியோ நமச்சி வாய புகலிடம் பிறிதொன் றில்லை
போற்றியோ நமச்சி வாய புறமெனைப் போக்கல் கண்டாய்
போற்றியோ நமச்சி வாய சயசய போற்றி போற்றி.

பதப்பொருள் : ஓம் நமச்சிவாய - ஓம் நமச்சிவாய, புயங்கனே - பாம்பணிந்தவனே, போற்றி - வணக்கம்; மயங்குகின்றேன் - அடியேன் மயங்குகின்றேன், ஓம் நமச்சிவாய - ஓம் நமச்சிவாய, போற்றி - வணக்கம்; புகல் இடம் - அடியேன் சென்று அடைக்கலம் புகுதற்குரிய இடம், பிறிது ஒன்று இல்லை - வேறொன்றில்லை; ஓம் நமச்சிவாய - ஓம் நமச்சிவாய, போற்றி - வணக்கம்; எனை - அடியேனை, புறம் போக்கல் - புறத்தே விடாதே; ஓம் நமச்சிவாய - ஓம் நமச்சிவாய, போற்றி - வணக்கம்; சயசய - உனக்கு வெற்றி வெற்றி, போற்றி போற்றி - வணக்கம் வணக்கம்.

விளக்கம் : திருவைந்தெழுத்தின் விளக்கம் சிவபுராண உரையில் கூறப்பட்டது. சிவபெருமானது திருவருளைப் பெறுதற்கு அவனைப் பல முறையும் திருவைந்தெழுத்து மந்திரத்தால் துதித்து விண்ணப்பித்தல் வேண்டுமாதலின், தமது விண்ணப்பத் தொடரின் முதல் இடை கடை என்னும் மூன்றிடங்களிலும் அதனைப் பல முறையும் கூறி விண்ணப்பித்தார்.

உலக மாயையை நீக்கியருளுபவன் இறைவன் ஆதலால், அதனைத் தமக்கு நீக்க வேண்டும் என்பதற்கு, 'மயங்குகின்றேன்' என்றும், உயிர்களுக்கு இறைவனைத் தவிர வேறு புகலிடம் ஒன்றும் இல்லாமையால், 'புகலிடம் பிறிதொன்றில்லை, புறம் எனைப் போக்கல்' என்றும் கூறினார். இறைவன் திருவருள் வெற்றி பெறுவதை வேண்டுவதே அவன் அடியவர்களது செயல் ஆதலால், 'சயசய' என்று வாழ்த்தினார். கண்டாய் - முன்னிலை அசை.

இதனால், திருவைந்தெழுத்தின் வாச்சியப் பொருளான இறைவனே உயிர்களுக்கு மயக்கத்தைத் தவிர்த்துப் புகலிடம் தர வல்லவன் என்பது கூறப்பட்டது.

62