186


போற்றிஎன் போலும் பொய்யர் தம்மைஆட் கொள்ளும் வள்ளல்
போற்றிநின் பாதம் போற்றி நாதனே போற்றி போற்றி
போற்றிநின் கருணை வெள்ளப் புதுமதுப் புவனம் நீர்தீக்
காற்றிய மானன் வானம் இருசுடர்க் கடவு ளானே.

பதப்பொருள்: புவனம் - நிலம், நீர் - நீர், தீ - நெருப்பு, காற்று - வாயு, வானம் - ஆகாயம், இயமானன் - உயிர், இரு சுடர் - சந்திரன் சூரியன் ஆகிய எட்டினையும் உருவமாகவுடைய, கடவுளானே - தேவனே, போற்றி - வணக்கம்; என் போலும் - என்னைப் போன்ற, பொய்யர்தம்மை - பொய்யர்களை, ஆட்கொள்ளும் - ஆட்கொண்டருளும், வள்ளல் - ஈகை மிக்க பெருந்தகையே, போற்றி - வணக்கம்; நின் பாதம் போற்றி - உன் திருவடிகளுக்கு வணக்கம், நாதனே போற்றி போற்றி - தலைவனே வணக்கம் வணக்கம்; நின் கருணை வெள்ளப் புதுமது - உனது அருள் வெள்ளமாகிய புதிய தேனுக்கு, போற்றி - வணக்கம்.

விளக்கம்: நிலம் முதலிய எட்டையும் அட்ட மூர்த்தம் என்ப. மெய்யரோடு பொய்யருக்கும் வரையறையின்றி வழங்குதலின் இறைவன் 'வள்ளல்' எனப்பட்டான். அவன் அருளின்றி ஒன்றும் நடைபெறாது. ஆதலின், அவன் அருளுக்குத் தனியே வணக்கம் செலுத்தப்பட்டது. அருள் வெள்ளம் கரைபுரண்டு ஓடி இன்பத்தை நல்குகிறது என்பார், 'கருணை வெள்ளப்புதுமது' என்றார்.

இதனால், இறைவன் மெய்யரோடு பொய்யரையும் ஆட்கொண்டு அருளும் வள்ளல் என்பது கூறப்பட்டது.

63

கடவுளே போற்றி என்னைக் கண்டுகொண் டருளு போற்றி
விடவுளே உருக்கி என்னை ஆண்டிட வேண்டும் போற்றி
உடலிது களைந்திட் டொல்லை உம்பர்தந் தருளு போற்றி
சடையுளே கங்கை வைத்த சங்கரா போற்றி போற்றி.

பதப்பொருள் : கடவுளே - எல்லாவற்றையும் கடந்த பெருமானே, போற்றி - வணக்கம்; என்னைக் கண்டு கொண்டு அருள் - அடியேனைக் கண் பார்த்து இரங்குக, போற்றி - வணக்கம்; விட - உலகப் பற்றை விடுவதற்கு, உள் உருக்கி - என் உள்ளத்தை அன்பால் உருகச் செய்து, என்னை ஆண்டிட வேண்டும் - என்னை ஆட்கொண்டருள வேண்டும், போற்றி - வணக்கம்; உடல் இது களைந்திட்டு - இந்த உடலினை நீக்கி, ஒல்லை - விரைவாக, உம்பர் - மேல் உலகமாகிய முத்தியினை, தந்தருள் - கொடுத்தருள்வாயாக, போற்றி - வணக்கம்; சடை உள் - சடையில், கங்கை வைத்த - கங்கையை ஏற்று வைத்துக்கொண்ட, சங்கரா - இன்பம் செய்பவனே, போற்றி போற்றி - வணக்கம் வணக்கம்.