விளக்கம் : மனம் இறைவனை நினைந்து உருகினால் உலகப் பற்று நீங்குமாதலால், 'விட உளே உருக்கி என்னை ஆண்டிட வேண்டும்' என்றார். உடல் இல்லை என்றால் உலகப்பற்று இல்லை. ஆகவே, உலகப்பற்று நீங்க உடல் அழிய வேண்டும் என்பார். 'உடலிது களைந்திட்டு' என்றார். உடல் அழிந்த பின்னர் வீடு பெறுதல் உண்மையாதலின், 'உம்பர் தந்தருளு' என்றார். இதனால், இறைவன் உயிர்களுக்கு மனத்தை உருக்கி ஆட்கொண்டு உடலை அழித்து வீடுபேறு அருளுவான் என்பது கூறப்பட்டது. 64 சங்கரா போற்றி மற்றோர் சரணிலேன் போற்றி கோலப் பொங்கரா அல்குற் செவ்வாய் வெண்ணகைக் கரிய வாட்கண் மங்கையோர் பங்க போற்றி மால்விடை யூர்தி போற்றி இங்கிவாழ் வாற்ற கில்லேன் எம்பிரான் இழித்திட்டேனே. பதப்பொருள்: சங்கரா - இன்பம் செய்வோனே, போற்றி - வணக்கம், மற்று ஒர் சரண் இலேன் - வேறு ஒரு புகலிடம் இல்லேன், போற்றி - வணக்கம்; கோலம் - அழகிய, பொங்கு அரா - சீறுகின்ற பாம்பின் படம் போன்ற, அல்குல் - அல் குலையும், செவ்வாய் - சிவந்த இதழையும், வெள் நகை - வெள்ளிய பற்களையும், கரிய வாள் கண் - கருமையாகிய வாள் போன்ற கண்களையும் உடைய, மங்கை - மங்கைப் பருவத்தினளாகிய உமா தேவியை, ஒர் பங்க - ஒரு பாகத்தில் அமைத்தவனே, போற்றி - வணக்கம்; மால் விடை ஊர்தி - பெரிய இடபத்தை ஊர்வோனே, போற்றி - வணக்கம்; இங்கு - இவ்வுலகத்தில், இவ்வாழ்வு - இப்பொய் வாழ்க்கையை, ஆற்றகில்லேன் - நான் பொறுக்கமாட்டேன்; எம்பிரான் - எம்பெருமானே, இழித்திட்டேன்' - இதனை இகழ்ந்து வெறுத்துவிட்டேன். விளக்கம்: சினம் கொண்ட போதுதான் பாம்பு சீறிப் படமெடுக்குமாதலின் 'பொங்கரா' என்றார். அரா ஆகுபெயராய் நின்று படத்தை உணர்த்தும். விடைமேல் உமை பங்கினனாக எழுந்தருளும் கோலம் அருட்கோலமாகும். அக்கோலங் கண்டு தம் குறையைக் கூறிக்கொள்வார், 'இங்கு இவ்வாழ்வாற்றகில்லேன் எம்பிரான் இழித்திட்டேன்' என்றார். இதனால், இவ்வுலக வாழ்வை வெறுத்து இறைவன் திருவடியைப் பற்றினவர்க்கு அருள் புரிவான் இறைவன் என்பது கூறப்பட்டது. 65 இழித்தனன் என்னை யானே எம்பிரான் போற்றி போற்றி பழித்திலேன் உன்னை என்னை ஆளுடைப் பாதம் போற்றி பிழைத்தவை பொறுக்கை யெல்லாம் பெரியவர் கடமை போற்றி ஒழித்திடிவ் வாழ்வு போற்றி உம்பர்நாட் டெம்பி ரானே.
|