பதப்பொருள்: என்னை யானே இழித்தனன் - என்னை நானே இழிவுபடுத்தினேன், எம்பிரான் - எம்பெருமானே, போற்றி போற்றி - போற்றி - வணக்கம் வணக்கம்; உன்னைப் பழித்திலேன் - உன்னையான் குறை கூறேன்; என்னை ஆள் உடை பாதம் - என்னை அடிமையாகவுடைய திருவடிக்கு, போற்றி - வணக்கம்; பிழைத்தவை எல்லாம் - சிறியவர் செய்த பிழைகளையெல்லாம், பொறுக்கை - பொறுத்துக்கொள்ளுதல், பெரியவர் கடமை - பெரியவரது கடமையாம், போற்றி - வணக்கம்; உம்பர் நாட்டு - மேலுலகத்தையுடைய, எம்பிரானே - எம்பெருமானே, இவ்வாழ்வு ஒழித்திடு இந்த வாழ்க்கையை ஒழித்தருள்வாயாக, போற்றி - வணக்கம். விளக்கம் : 'என் தீவினையைக் குறித்து என்னை யானே நொந்துகொள்வதன்றி உன்னை நிந்திக்கிலேன்' என்பார், 'இழித்தனன் என்னை யானே, பழித்திலேன் உன்னை' என்றார். 'குற்றமே செய்யினும் குணமெனக் கொள்ளும் கொள்கையான்' ஆதலால் அடியேன் செய்த பிழை இருப்பின், அதனைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்பார். 'பிழைத்தவை பொறுக்கை யெல்லாம் பெரியவர் கடமை' என்றார். 'சிறியோர் செய்த சிறு பிழையெல்லாம் பெரியோராயின் பொறுப்பது கடனே' என்பது நீதி நூல். இதனால், இறைவன் உயிர்கள் செய்யும் குற்றத்தையும் பொறுத்து ஏற்றுக்கொள்வான் என்பது கூறப்பட்டது. 66 எம்பிரான் போற்றி வானத் தவரவ ரேறு போற்றி கொம்பரார் மருங்குல் மங்கை கூறவெண் ணீற போற்றி செம்பிரான் போற்றி தில்லைத் திருச்சிற்றம் பலவ போற்றி உம்பரா போற்றி என்னை ஆளுடை ஒருவ போற்றி. பதப்பொருள்: எம்பிரான் போற்றி - எம் தலைவனே வணக்கம்; வானத்து - விண்ணாட்டிலுள்ள, அவர் அவர் - அந்த அந்தத் தேவர்களுக்கு, ஏறு - ஆண் சிங்கம் போல்பவனே போற்றி - வணக்கம்; கொம்பர் ஆர் - பூங்கொம்பு போன்ற, மருங்குல் - இடையையுடைய, மங்கை - உமாதேவியை, கூற - ஒரு பாகத்திலுடையவனே, வெள்நீற - திருவெண்ணீற்றையுடையவனே, போற்றி - வணக்கம்; செம்பிரான் போற்றி - செம்மேனியையுடைய பெருமானே வணக்கம்; தில்லைத் திருசிற்றம்பலவ -தில்லை நகரின்கண் பொன்னம்பலத்தில் திகழ்பவனே, போற்றி - வணக்கம்; உம்பரா - மேலாகிய முத்தியுலகத்தையுடையவனே - போற்றி - வணக்கம்; என்னை ஆள் உடை - என்னை அடிமையாகவுடைய, ஒருவ - ஒப்பற்றவனே, போற்றி - வணக்கம். விளக்கம்: வானத்தவர் அவர் எனப் பிரித்து, 'அவ' என்பதைப் பகுதிப்பொருள் விகுதியாகக் கொள்ளினும் அமையும்.
|