189


கொம்பு, 'கொம்பர்' எனப் போலியாயிற்று. தில்லை, ஊர்ப் பெயர்; திருச்சிற்றம்பலம், இறைவன் நடனம் செய்யும் இடம்.

இறைவனது நாமம் 'மங்கை கூறன்' என்றும், வண்ணம் வெண்ணீறு சண்ணித்த செம்மேனி என்றும், ஊர் தில்லை என்றும் கூறித் தாளினையடைய விழைகிறார் அடிகள். அகத்துறை வாழ்விலும் அன்பு வளர்ச்சி இம்முறையிலே நிகழக் காணலாம். திருநாவுக்கரசரும்,

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்"

என்று இம்முறையிலே அன்பு வளர்ச்சியைக் காட்டினார்.

இதனால், இறைவனிடம் அடியார்கள் காதல் கொள்ளும் முறை கூறப்பட்டது.

67

ஒருவனே போற்றி ஒப்பில் அப்பனே போற்றி வானோர்
குருவனே போற்றி எங்கள் கோமளக் கொழுந்து போற்றி
வருகவென் றென்னை நின்பால் வாங்கிட வேண்டும் போற்றி
தருகநின் பாதம் போற்றி தமியனேன் தனிமை தீர்த்தே.

பதப்பொருள்: ஒருவனே - தனி முதல்வனே, போற்றி - வணக்கம். ஒப்பு இல் அப்பனே - நிகரில்லாத தந்தையே, போற்றி - வணக்கம்; வானோர் குருவனே - தேவர்களுக்குக் குருவானவனே, போற்றி - வணக்கம்; எங்கள் - எங்களுடைய, கோமளம் கொழுந்து - அழகிய சோதியே, போற்றி - வணக்கம்; வருக என்று - வருவாயாக என்று, என்னை - என்னை, நின்பால் - உன்னிடம், வாங்கிடவேண்டும் - அழைத்து ஏற்றுக்கொள்ள வேண்டும், போற்றி - வணக்கம்; தமியனேன் - துணையில்லா தேனது, தனிமை தீர்த்து - தனிமையை நீக்கி, நின்பாதம் தருக - உன்னுடைய திருவடித் துணையைத் தருவாயாக, போற்றி - வணக்கம்.

விளக்கம்: ஒருவனே தேவன் ஆதலால், 'ஒருவனே' என்றார். இறைவன் என்றும் அழியாத் தந்தையாதலால், 'ஒப்பில் அப்பனே' என்றருளினார். என்றும் மாறாத அழகுடைமை பற்றி, 'கோமளக் கொழுந்து' என்றார். இறைவன் திருப்பெருந்துறையில் தனிமையில் விட்டு மறைந்தமையை எண்ணி வருந்துவார், 'தமியனேன்' என்றார் தனிமையைப் போக்கித் தம்மையாட் கொள்ள வேண்டும் என்பார், 'தனிமை தீர்த்து வருக என்று நின்பால் வாங்கிட வேண்டும்' என்றார்.

இதனால், இறைவன் திருவடியே உயிர்களுக்குச் சிறந்த துணை என்பது கூறப்பட்டது.

68