தீர்ந்தஅன் பாய அன்பர்க் கவரினும் அன்ப போற்றி பேர்ந்துஎன் பொய்ம்மை ஆட்கொண் டருளிடும் பெருமை போற்றி வார்ந்தநஞ் சயின்று வானோர்க் கமுதம்ஈ வள்ளல் போற்றி ஆர்ந்தநின் பாதம் நாயேற் கருளிட வேண்டும் போற்றி. பதப்பொருள்: தீர்ந்த - முதிர்ந்த, அன்பு ஆய அன்பர்க்கு - அன்பு வடிவமான அடியாரிடத்தே, அவரினும் அன்ப - அவரைப் பார்க்கிலும் மிகுந்த அன்புடையவனே, போற்றி - வணக்கம்; என் பொய்ம்மை பேர்ந்தும் - என்னுடைய பொய்ம்மை நீங்கவும், ஆட்கொண்டு அருளிடும் - அடிமையாகக்கொண்டு அருள் செய்யும், பெருமை - பெருந்தன்மைக்கு, போற்றி - வணக்கம்; வார்ந்த நஞ்சு - பாற்கடலிற்பரவி எழுந்த நஞ்சை, அயின்று - உண்டு, வானோர்க்கு - தேவர்களுக்கு, அமுதம் ஈ - அமுதத்தைக் கொடுத்த, வள்ளல் - வள்ளலே, போற்றி - வணக்கம்; ஆர்ந்த நின் பாதம் - எங்கும் நிறைந்த உன் திருவடியை, நாயேற்கு அருளிட வேண்டும் - நாயின் தன்மையுடைய சிறியேனுக்கு ஈந்திட வேண்டும், போற்றி - வணக்கம். விளக்கம்: தீர்ந்த அன்பாவது, கண்ணப்பர் அன்பை ஒப்பதோர் அன்பு. அன்பாய அன்பர் எனப்படுவார், அன்பு வேறு, அன்பர் வேறு என்பது இல்லாமல், அன்பே வடிவெடுத்தாற் போன்றவர்; அவர் கண்ணப்பர் போன்றவரே. அடியார் பொருட்டு இறைவன் செய்த அருட்செயல்களை எண்ணி, 'அன்பர்க்கு அவரினும் அன்ப' என விளித்தார். அன்பருக்காக இறைவன் அன்பு செலுத்தியதை, கண்ணப்பரது கையை அம்பொடும் அகப்படப் பிடித்து, 'நில்லு கண்ணப்ப, நில்லு கண்ணப்ப, என் அன்புடைத் தோன்றல் நில்லு கண்ணப்ப' என்று அருளியதனால் அறியலாம். தீமை பயக்கம் நஞ்சைத் தான் உண்டு நன்மை பயக்கும் அமுதத்தைத் தேவர்களுக்கு ஈந்தமையால் இறைவனை, 'வள்ளல்' என்றார். இதனால், இறைவன் அடியார்பொருட்டுத் தீமையைத் தான் ஏற்று நன்மையே புரியும் கருணையாளன் என்பது கூறப்பட்டது. 69 போற்றிஇப் புவனம் நீர்தீக் காலொடு வான மானாய் போற்றிஎவ் வுயிர்க்குந் தோற்றம் ஆகிநீ தோற்ற மில்லாய் போற்றியெல் லாவு யிர்க்கும் ஈறாய்ஈ றின்மை யானாய் போற்றிஐம் புலன்கள் நின்னைப் புணர்கிலாப் புணர்க்கை யானே. பதப்பொருள் : இப்புவனம் - இந்நிலம், நீர் - நீர், தீ - நெருப்பு, காலொடு - காற்றுடன், வானம் ஆனாய் - விண்ணும் ஆனவனே, போற்றி - வணக்கம்; எவ்வுயிர்க்கும் - எவ்வகையாகிய உயிர்கட்கும், தோற்றம் ஆகி - பிறத்தற்குக் காரணமாகி, நீ தோற்றம்
|