191


இல்லாய் - நீ பிறத்தல் இல்லாதவன், போற்றி - வணக்கம்; எல்லா உயிர்க்கும் - எல்லா உயிர்களுக்கும், ஈறு ஆய் - ஒடுங்கும் முடிவிடமாகி, ஈறு இன்மை ஆனாய் - நீ ஒடுங்குதல் இல்லாதவன் ஆனவனே, போற்றி - வணக்கம்; ஐயம்புலன்கள் - ஐம்பொறிகள், நின்னைப் புணர்கிலா - உன்னைப் பற்றாத, புணர்க்கையானே - நிலையை உடையவனே, போற்றி - வணக்கம்.

விளக்கம்: உயிர்களுக்கு அவற்றின் வினைக்கீடான உடம்பு முதலியவற்றைக் கூட்டுவிப்பது தோற்றம்; அவற்றைப் பிரிப்பது ஈறு. இறைவன் இவ்விரண்டையும் பேரூழியின் முதலிலும் இறுதியிலும் நிகழ்த்துகின்றானாதலின், 'எவ்வுயிர்க்கும் தோற்றம் ஆகி எல்லாவுயிர்க்கும் ஈறாய்' என்று கூறினார். சங்காரக் கடவுளை 'அந்தம்' (சிவஞான போதம்) என்றது போல, ஒடுக்கஞ்செய்வானை 'ஈறு' என்றார். உலகத்தோடு புணர்ந்திருந்தும் அதற்கு அப்பாற்பட்டவன் இறைவனாதலின், 'ஐம்புலன்கள் புணர்கிலாப் புணர்க்கையானே' என்றார். 'புலன்கள்' என்றது பொறிகளை.

இதனால், இறைவன் உலகத்தோடு தோய்ந்தும் தோய்வற நிற்கின்றான் என்பது கூறப்பட்டது.

70

8. ஆனந்தத்தழுந்தல்

அதாவது, பேரின்பத்தில் அழுந்தி நிற்றலாம்.

புணர்ப்ப தொக்க எந்தை என்னை ஆண்டு பூண நோக்கினாய்
புணர்ப்ப தன்றி தென்ற போது நின்னொ டென்னொ டென்னிதாம்
புணர்ப்ப தாக அன்றி தாக அன்பு நின்க ழற்கணே
புணர்ப்ப தாக அங்க ணாள புங்க மான போகமே.

பதப்பொருள்: எந்தை - என் அப்பனே, அம்கணாள - கண்ணுக்கு அழகைத் தருகின்ற கருணையை ஆள்பவனே, என்னை - அடியேனை, புணர்ப்பது ஒக்க ஆண்டு - அன்றே உன் திருவடியில் சேர்த்துக்கொள்வது போலவே ஆட்கொண்டு, பூண நோக்கினாய் - உனது கருணையை நான் முழுவதும் பெறுமாறு திருவருள் நோக்கம் பாலித்தாய்; (ஆயினும்) இது புணர்ப்பது அன்று என்ற போது - என் வினையாகிய இது உன்னோடு சேர்ப்பதாகாது என்ற நிலை உண்டான போது, இது - என்னை நீ ஆண்டு கொண்ட இந்நிலை, நின்னொடு என்னொடு என் ஆம் - உன்னோடும் என்னோடும் என்ன தொடர்பை உண்டாக்குவதாகும்? (எனினும்) இது புணர்ப்பதாக அன்றாக - எனது வினையின் நிலை உன்னோடு சேர்ப்பதாகுக, அல்லதாகுக; நின் கழற்கண் அன்பே - உன் திருவடிக்கண் எனக்குத் தோன்றுகின்ற அன்பு ஒன்றே, (நின் கழற்கண்) புங்கமான போகம் புணர்ப்பதாக - உனது திருவடிக்கண் உளதாகின்ற உயர்ந்த பேரின்பத்தைக் கூட்டுவதாக.