விளக்கம்: இறைவன் ஞானாசிரியனாய் வந்து அடிகளை ஆட்கொண்டருளிய காலத்தில் அவரைத் தன்னுடன் சேர்த்துக் கொள்ளல் வேண்டும் என்பதே அவனுடைய திருவுள்ளம் என்பது அடிகள் கருத்து. அது, 'உடையான் அடிநாயேனைத் தினையின் பாகமும் பிரிவது திருக்குறிப்பன்று' (திருச்சதகம் 37) என்று முன்னர் அவர் அருளிச்செய்திருப்பதால் விளங்கும். எனவே, அதனையே இங்கு, 'புணர்ப்ப தொக்க எந்தை என்னை ஆண்டு பூண நோக்கினாய்' என்றார். இறைவனது திருவுள்ளம் அத்தகையதாயினும் தமது வினையே அதனை இடை நின்று தடுத்தது என்று அடிகள் கருதுகின்றார். அதனையும், அத்திருப்பாடலின் முதலிலே, 'வினை என்போல் உடையார் பிறர் ஆர்?' என்று அருளிய குறிப்பினால் உணர்கின்றோம். ஆகவே, அதனையே இங்கும் 'புணர்ப்பதன்றி தென்றபோது நின்னொடென்னொ டென்னிதாம்' என்று அருளினார் என்க. முன்னைத் தவமுதிர்ச்சியால் இறைவனது திருவடியிலே அன்பு நிகழப்பெற்றவர்க்கு, வினையால் வரும் தடைகள் இருப்பினும் அவை ஒன்றும் செய்யா என்பார், 'புணர்ப்பதாக அன்றிதாக' என்றார். இறைவனுடைய திருவடிக்கண் உண்டாகின்ற அன்பு ஒன்றே ஆங்கு அளவின்றி விளையும் உயர்ந்த சிவானந்தம் தரவல்லது எனவும், அந்த அன்பு ஒன்று மட்டும் தமக்கு நீங்காது இருந்தால் அது போதும் எனவும் கூறுவார், 'அன்பு நின்கழற்கணே புங்கமான போகம் புணர்ப்பதாக' என்றார். உலக இன்பமும் 'போகம்' எனப்படுதலால், சிவபோகத்தைத் தெளிவாக விளக்குதற்கு, 'புங்கமான போகம்' என்றார். 'நின்கழற்கண்' என்பதை இடைநிலைத் தீவகமாக முன்னும் பின்னும் கூட்டியும், 'கழற்கணே' என்னும் பிரிநிலை ஏகாரத்தைப் பிரித்து, 'அன்பு' என்பதனோடு இயைத்தும் பொருள் கொள்க. இதனால், சிவானந்தமாகிய சாத்தியத்திற்குள் சிவத்தினிடத்து உண்டாகின்ற அன்பே சிறந்த சாதனம் என்பது கூறப்பட்டது. 71 போகம் வேண்டி வேண்டி லேன்பு ரந்த ராதி இன்பமும் ஏக நின்க ழலிணைய லாதி லேனென் எம்பிரான் ஆகம் விண்டு கம்பம் வந்து குஞ்சி அஞ்ச லிக்கணே ஆக என்கை கண்கள் தாரை ஆற தாக ஐயனே. பதப்பொருள் : ஏக - ஏகனே, என் எம்பிரான் - என் தலைவனே, ஐயனே - அப்பனே, போகம் வேண்டி - சிற்றின்பத்தை விரும்பி, புரந்தரன் ஆதி இன்பமும் - இந்திரன் முதலிய இறையவர் பதவிக்குரிய இன்பங்களையும், வேண்டிலேன் - விரும்புகின்றேன் இல்லை; நின் - உன்னுடைய, கழல் இணை
|