அல்லாது - திருவடி இரண்டும் அன்றி, இலேன் - வேறு யாதும் பற்று இல்லேன்; (ஆகவே, அந்நிலையிலேயே) ஆகம் விண்டு - உடல் நெகிழ்ந்து, கம்பம் வந்து - நடுக்கம் உண்டாகி, என்கை - என்னுடைய கைகள், குஞ்சி அஞ்சலிக்கண் ஆக - சிரத்தின்மீது கும்பிடும் தொழிலின்கண் நிற்பதாக, கண்கள் தாரை ஆறதாக - கண்கள் நீர்த்தாரையாகிய ஆற்றினை உடையனவாக. விளக்கம்: இந்திரன் முதிலியோர் பதங்களில் பெறும் இன்பமும் நிலையாதனவே ஆதலால், 'வேண்டிலேன் புரந்தராதி இன்பமும்' என்றார். 'கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு' என்று முன்னரும் கூறினார். ஆகம் விள்ளல் முதலியன அன்பர்பாற்காணப்படும் மெய்ப்பாடுகளாம். குஞ்சி - குடுமி. இங்கு அதனையுடைய தலைக்காயிற்று. இதனால், முன்னைத் தவமிகுதியால் இறைவன் திருவடியில் அன்பு உண்டாகப்பெற்றவர், அந்த அன்பினை மேலும் பெருக்கிக்கொள்ளுதல் வேண்டும் என்பது கூறப்பட்டது. 72 ஐய நின்ன தல்ல தில்லை மற்றோர் பற்று வஞ்சனேன் பொய்க லந்த தல்ல தில்லை பொய்மை யேன்என் எம்பிரான் மைக லந்த கண்ணி பங்க வந்து நின்க ழற்கணே மெய்கலந்த அன்ப ரன்பெ னக்கும் ஆக வேண்டுமே. பதப்பொருள்: ஐய - ஐயனே, என் எம்பிரான் - என் தலைவனே, மை கலந்த கண்ணி பங்க - மை தீட்டிய கண்களை உடைய உமையம்மையை ஒரு பாகத்தில் உடையவனே, நின்னது அல்லது - உன்னுடைய ஆதரவன்றி, மற்றோர் பற்று இல்லை - வேறோர் ஆதரவு இல்லை; வஞ்சனேன் - வஞ்சகத்தையுடைய யான், பொய் கலந்தது அல்லது - பொய்யோடு கூடியிருப்பதன்றி, இல்லை - மெய்யோடு கூடியிருத்தல் இல்லை; (ஆகையால்) பொய்மையேன் - யான் பொய்மையை உடையவனே ஆகின்றேன்; (ஆயினும்) நின் கழற்கண் வந்து - உன் திருவடி நிழலிலே சேர்ந்து, மெய் கலந்த - மெய்யான பேற்றைப் பெற்ற, அன்பர் அன்பு - மெய்யன்பரது அன்பு போன்ற அன்பு, எனக்கும் ஆக வேண்டும் - எனக்கும் உண்டாதல் வேண்டும். விளக்கம்: இறைவன் திருவடியைத் தவிர மற்றொரு பற்று தமக்கு இல்லை என்பார், 'நின்ன தல்ல தில்லை மற்றோர் பற்று' என்றார். 'மற்றுப் பற்றெனக் கின்றி நின் திருப்பாதமே மனம் பாவித்தேன்' என்ற சுந்தரர் வாக்கும் நினைக்கத்தக்கது. தம்மைத் தாழ்வாகக் கருதுதலே அடிகளுக்கு இயல்பாதலின், 'பொய் கலந்த தல்ல தில்லை பொய்மையேன்' என்றார். யானே பொய் என் நெஞ்சும் பொய் என் அன்பும் பொய்' என்று பின்னரும் கூறுவார். உண்மையான அன்புடையவர்கள் இறைவன் கழலினைச் சேர்ந்தார்கள் என்பார், 'வந்து நின் கழற்கணே மெய்
|