பதப்பொருள்: இணங்கு கொங்கை மங்கை பங்க - நெருங்கிய தனங்களையுடைய மாதினை ஒரு கூறுடையவனே, மற்று ஒர் உண்மை இன்மையின் - உன்னையன்றி வேறொரு மெய்ப்பொருள் இல்லாமையால், மண்ணும் விண்ணும் - மண்ணுலகமும் விண்ணுலகமும், நின்னை வணங்கும் - உன்னை அடைய விரும்பி வழிபடும்; வேதம் நான்கும் - மறைகள் நான்கும், நின்னை எய்தலுற்று - உன்னை அடைய விரும்பி, ஓலமிட்டு உணங்கும் - முறையிட்டு அடையப்பெறாமையால் வாடி நிற்கும்; யாம் வணங்கி - அடியேங்களாகிய நாங்கள் உன்னை வணங்கி, விடேம் என்ன - உன் திருவடியை விட மாட்டோம் என்று கூறவும், வந்து நின்றருளுதற்கு - நீ வந்து அருள் புரிவதற்கு, நினைப்பது என்கொல் - நினைப்பது யாதோ? விளக்கம்: 'மண்ணும் விண்ணும்' என்பன ஆகுபெயராய் ஆண்டுள்ள மக்களையும் தேவரையும் உணர்த்தும், வேதத்தினாலே இறைவனது முழு இயல்பையும் கூற முடியாதாகையால், 'வேத நான்கும் ஓலமிட்டுணங்கும்' என்றார். 'அல்லையீதல்லை யீதென மறைகளும் அன்மைச் சொல்லினால் துதித்து இளைக்கும் இச்சுந்தரன்' என்ற பரஞ்சோதி முனிவர் வாக்கும் இங்கு நினைக்கத்தக்கது. 'என் கொலோ நினைப்பதே' என்றமையால், தமக்கு அருள்வது பற்றி இறைவன் எண்ணுகிற எண்ணம் யாதோ என்று ஐயப்படுகிறார். இதனால், இறைவனே அருளினாலன்றி அவன் அருளைப் பெற முடியாது என்பது கூறப்பட்டது. 75 நினைப்ப தாக சிந்தை செல்லும் எல்லை ஏய வாக்கினால் தினைத்த னையும் ஆவ தில்லை சொல்ல லாவ கேட்பவே அனைத்து லகும்ஆய நின்னை ஐம்பு லன்கள் காண்கிலா என்னத்தெ னைத்த தெப்புறத்த தெந்தை பாதம் எய்தவே. பதப்பொருள்: சிந்தை செல்லும் எல்லை ஏய - மனம் செல்லுகின்ற எல்லையைப் பொருந்த, வாக்கினால் - மொழியினால், தினைத்தனையும் ஆவதில்லை - தினையளவும் முடிவதில்லை. (ஏனெனில்) சொல்லல் ஆவ - சொல்லப்படுவன எல்லாம், கேட்பவே - செவியால் கேட்கப்படுவனவேயாம், அனைத்து உலகும் ஆய நின்னை - எல்லா உலகமுமான உன்னை, ஐம் புலன்கள் காண்கிலா - ஐம்பொறிகள் அறியமாட்டா, (ஆதலின்) எந்தை பாதம் - எம் தந்தையாகிய உன்னுடைய திருவடி, எய்த - எம் போன்றவர் அடைய, எனைத்து எனைத்து - எத்துணைப் பெரிய அளவினது? எப்புறத்தது - எப்பாலது? (எனினும்) நினைப்பு அது ஆக - என் எண்ணம் உன் திருவடியை எய்துவதேயாகுக. விளக்கம்: 'நினைப்பதாக' என்பது வியங்கோள். சிந்தை நினைக்கும் எல்லைக்கு வாக்குத் தொடர முடியாது என்பார்,
|