'சிந்தை செல்லும் எல்லை ஏய வாக்கினால் தினைத்தனையும் ஆவதில்லை' என்றார். இனி, இறைவனது பெருமையைக் கூறும் நூல்கள் எல்லாம் செவியால் கேட்கப்படுவனவே அன்றி, அறிவால் அறிந்து அனுபவிக்கும் அனுபவமானவை அல்ல என்பார், 'சொல்ல லாவ கேட்பவே' என்றார். அச்சிந்தையும் வாக்குமே அன்றி ஏனைய கருவிகளும் இறைவனைக் காண வல்லன அல்ல என்பார், 'ஐம்புலன்கள் காண்கிலா' என்றார். இக்கருத்துப் பற்றியே பின்னரும், 'சிந்தை செய்கை கேள்வி வாக்கு சீரில் ஐம்புலன்களால் எய்திடாத' என்று கூறுவதைக் காண்க. இறைவன் காண்பதற்கு அரியவனாயினும், அவன் அடியார்கள் அவனை நினைத்தலை விடார் ஆதலின், 'எந்தை பாதம் எய்த நினைப்பதாக' என்றார். இதனால், சிந்தையும் மொழியும் ஏனைய கருவிகளும் செல்லா நிலைமைத்துச் சிவ பரமபொருள் என்பது கூறப்பட்டது. 76 எய்த லாவ தென்று நின்னை எம்பி ரானிவ் வஞ்சனேற் குய்த லாவ துன்கண் அன்றி மற்றொ ருண்மை இன்மையின் பைத லாவ தென்று பாது காத்தி ரங்கு பாவியேற் கீத லாது நின்கண் ஒன்றும் வண்ணம் இல்லை ஈசனே. பதப்பொருள் : எம்பிரான் - எம்பெருமானே, ஈசனே - ஆண்டவனே, நின்னை - உன்னை, எய்தலாவது - யான் அடைதலாவது, என்று - எப்போது? இவ்வஞ்சனேற்கு - இவ்வஞ்சகனாகிய எனக்கு, உய்தலாவது - உய்தி பெறுதலாவது, உன்கண் அன்றி - உன்னிடத்தன்றி, மற்றொர் உண்மை இன்மையின் - வேறோர் உண்மையான இடத்தில் இல்லாமையால், பைதல் ஆவது என்று - அடியேனுக்குத் துன்பம் உண்டாமென்று கருதி, பாதுகாத்து - காப்பாற்றி, இரங்கு - எனக்கு இரங்கி அப்பேற்றினை அருள்வாயாக! பாவியேற்கு - பாவியேனாகிய எனக்கு, ஈது அலாது - இதைத் தவிர, நின்கண் - உன்னிடத்தில், வண்ணம் ஒன்றும் இல்லை - வேண்டிக் கொள்வது ஒன்றும் இல்லை. விளக்கம் : இறைவன் திருவடியே உயிர்களுக்கு வீடு பேறு ஆதலின், 'உய்தலாவது உன்கண் அன்றி மற்றொர் உண்மை இன்மையின்' என்றும், அத்திருவடியை நீங்கினால் பிறவித் துன்பமே வருமாதலின், 'பைதலாவது' என்றும், அப்பேற்றினை அவனே அருள வேண்டுமாதலின், 'பாதுகாத்து இரங்கு' என்றும், ஞானிகட்கு இறைவன் திருவடியன்றி வேண்டுவது ஒன்றும் இல்லாமையால், ஈதலாது நின்கண் ஒன்றும் வண்ணம் இல்லை' என்றும் கூறினார்.
|