198


நான், ஐயா - ஐயனே, வெந்து விழுந்திலேன் - தீயில் வெந்து இறந்தேனில்லை; என் உள்ளம் வெள்கி - என் மனம் நாணி, விண்டிலேன் - நெஞ்சு வெடித்திலேன், எந்தை ஆய நின்னை - எம் தந்தையாகிய உன்னை, இன்னம் - இன்னமும், எய்தல் உற்று - அடைய விரும்பி, இருப்பன் - இங்கு வாழ்ந்திருக்கின்றேன்.

விளக்கம்: சிந்தை முதலியன இறைவனை அடைதற்குத் தடையாகவுள்ளனவே அன்றித் துணையாகா ஆதலின், 'அவற்றால் நின்னை எய்திடாத மூர்க்கனேன்' என்றார். இறைவனை அடையாது வாழ்ந்து பயனில்லை என்பார், 'வெந்து விழுந்திலேன்' என்றும், 'உள்ளம் விண்டிலேன்' என்றும், இறைவனை எவ்வாற்றாலும் அடைதல் கூடும் என்ற துணிவினாலேயே வாழ்கின்றேன் என்பார், 'நின்னை இன்னம் எய்தலுற்றிருப்பனே' என்றும் கூறினார்.

இதனால், இறைவனை அடைதற்கு அகப்புறக் கருவிகள் தடை என்பது கூறப்பட்டது.

79

இருப்பு நெஞ்ச வஞ்ச னேனை ஆண்டு கொண்ட நின்னதாள்
கருப்பு மட்டு வாய்ம டுத்தெ னைக்க லந்து போகவும்
நெருப்பு முண்டு யானு முண்டி ருந்த துண்ட தாயினும்
விருப்பு முண்டு நின்கண் என்கண் என்ப தென்ன விச்சையே.

பதப்பொருள் : இருப்பு நெஞ்சம் - இரும்பு போன்ற வன்மையான மனத்தையுடைய, வஞ்சனேனை - கள்வனாகிய என்னை, ஆண்டு கொண்ட - ஆட்கொண்டருளின, நின்ன தாள் - உன்னுடைய திருவடிகளில் எழும், கருப்பு மட்டு - கருப்பஞ்சாறு போன்ற இன்பத்தினை, வாய் மடுத்து - யான் நுகரச் செய்து, எனைக் கலந்து போகவும் - என்னை உடன் கலந்து நீ பிரிந்து செல்லவும், நெருப்பும் உண்டு - அப்பிரிவாற்றாமையைப் போக்கக்கூடிய நெருப்பும் உள்ளது; யானும் உண்டு - நானும் உணவு உண்டு, இருந்தது உண்டு - வாழ்ந்தது உண்டு; அது ஆயினும் - அங்ஙனமானாலும், என்கண் - என்னிடத்தில், நின்கண் - உன்னிடத்தில், விருப்பும் உண்டு என்பது - அன்பும் உண்டு என்று சொல்வது, என்ன விச்சை - என்ன விந்தை?

விளக்கம் : 'நின்ன' என்றவிடத்து அகரம் ஆறாம் வேற்றுமைப் பன்மை உருபு. னகரமெய் விரித்தல் விகாரம். இறைவன் திருவருள் இனிக்கும் என்பதை, 'கருப்பு மட்டு' என்பதனால் குறிப்பிட்டார். 'என்னில்கருணை வான்தேன் கலக்க' என்று திருவண்டப் பகுதியிலும் கூறினார்.

இறைவன் செய்த பேருதவியை நினைந்துருகும் அன்பு இருக்குமாயின், நெருப்பில் விழுந்து இறந்திருக்க வேண்டும். அது செய்யாது வாழ்கின்றேன் என்பார், 'நெருப்புமுண்டு யானும்