பேசப் பட்டேன் நின்னடி யாரில் திருநீறே பூசப் பட்டேன் பூதல ரால்உன் அடியானென் றேசப் பட்டேன் இனிப்படு கின்ற தமையாதால் ஆசைப் பட்டேன் ஆட்பட் டேன்உன் அடியேனே. பதப்பொருள்: நின் அடியாரில் - நான் உன்னடியார்களைப்போல, பேசப்பட்டேன் - உன்னால் உபதேசம் செய்யப் பெற்றேன்; திருநீறே பூசப்பட்டேன் - திருநீறும் பூசப்பட்டேன்; ஆட்பட்டேன் - உனக்கு அடிமைப்பட்டேன், (அதனால்) பூதலரால் - உலகவரால், உன் அடியான் என்று - உனக்கு அடியவன் என்று சொல்லி, ஏசப்பட்டேன் - இகழப்பட்டேன்; இனிப் படுகின்றது அமையாது - இனி இவ்வுலகில் இருத்தல் பொருந்தாது; உன் அடியேன் - உனக்கு அடியவனாகிய யான், ஆசைப்பட்டேன் - உன்னை அடைய விரும்பினேன். விளக்கம்: அமைச்சு நிலை மாறி அடிமை நிலையை அடிகள் பூண்டமையால் உலகினர் அவரை ஏசினர். ஞானோபதேசம் செய்யுங்காலத்தில் ஞானாசிரியரால் திருநீறு பூசப்பெறுவது மரபு ஆதலின், 'திருநீறே பூசப்பட்டேன்' என்றார். 'படுகின்றது அமையாது' என்பதனால், உலக வாழ்வில் தமக்குள்ள வெறுப்பைக் காட்டுகிறார். ஆல், ஆசை. இதனால், மெய்யடியார்கள் உலகத்தை வெறுத்து வீடு பேற்றையே விரும்புவர் என்பது கூறப்பட்டது. 82 அடியேன் அல்லேன் கொல்லோ தான்எனை ஆட்கொண் டிலைகொல்லோ அடியா ரானார் எல்லாரும் வந்துன் தாள்சேர்ந்தார் செடிசேர் உடலம் இதுநீக்க மாட்டேன் எங்கள் சிவலோகா கடியேன் உன்னைக் கண்ணாரக் காணு மாறு காணேனே. பதப்பொருள்: எங்கள் சிவலோகா - எங்கள் சிவலோக நாதனே, அடியார் ஆனார் எல்லாரும் - உன்னால் ஆட்கொள்ளப்பட்ட அடியார் எல்லாரும், வந்து உன் தாள் சேரந்தார் - வந்து உன் திருவடியைச் சேர்ந்துவிட்டார்கள்; (நான் அவ்வாறு சேராமையால்) அடியேன் அல்லேன் கொல்லோ - நான் உன்னுடைய அடியேன் அல்லேனோ? எனை ஆட்கொண்டிலை கொல்லோ - நீ என்னை அடிமை கொண்டிலையோ? செடிசேர் உடலம் இது - தீவினை பொருந்தும் உடலாகிய இதனை, நீக்க மாட்டேன் - ஒழிக்க மாட்டேன்; கடியேன் - கடியவனாகிய நான், உன்னைக் கண்ணாரக் காணுமாறு - உன்னைக் கண்குளிரக் காணுகின்ற வழியினை, காணேன் - கண்டிலேன். விளக்கம்: ஆட்கொள்ளப்பட்ட அடியார் எல்லாம் இறைவனடி சேர்ந்துவிட்டார். தம்மை இங்கு ஒழித்து அருளினமையால் இன்னும் ஆட்கொள்ளப்படவில்லையோ என்று ஐயுறுவார், 'அடியேனல்லேன் கொல்லோ நீ எனை ஆட்கொண்டிலை
|