கொல்லோ' என்றார். செடி சேர் உடலம் - வினைத்தொகை. இன்னும் இங்கிருப்பதால் வினை ஏறிக்கொண்டிருக்கிறது என்பதாம். கடியேன் - குழைவு இல்லாதேன். முன்பு ஆட்கொள்ள வந்தபோது கண்டது போலவே, பின்பும் வந்து அந்த ஞானாசிரிய வடிவத்தைக் காட்டக் காணும் விருப்பம் உடையவராய், 'உன்னைக் கண்ணாரக் காணுமாறு காணேனே' எனக் கூறி இரங்கினார். இதனால், இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட அடியார் உலகிலே வாழ விரும்பமாட்டார்கள் என்பது கூறப்பட்டது. 83 காணு மாறு காணேன் உன்னை அந்நாட் கண்டேனும் பாணே பேசி என்றனைப் படுத்த தென்ன பரஞ்சோதி ஆணே பெண்ணே ஆரமுதே அத்தா செத்தே போயினேன் ஏணா ணில்லா நாயினேன் என்கொண் டெழுகேன் எம்மானே. பதப்பொருள் : பரஞ்சோதியே - மேலான ஒளியே, ஆணே - ஆணாயவனே, பெண்ணே - பெண்ணாயவனே, ஆர் அமுதே - அரிய அமுதமே, அத்தா - அப்பனே, எம்மானே - எம் பெரியோனே, உன்னை அந்நாள் கண்டேனும் - உன்னை அந்நாளில் குருந்தமர நிழலில் குருவாய் எழுந்தருளக் கண்டேன் எனினும், காணுமாறு காணேன் - காண வேண்டிய முறையிலே காணவில்லை; (என்றாலும்) பாணே பேசி - இனிய சொற்களைச் சொல்லி, என்றனைப் படுத்தது என்ன - என்னை உன் வசப்படுத்தியது என்ன காரணத்தால்? செத்தே போயினேன் - இப்பொழுது யான் திருவருளைப் பெறாது இறந்தே போயினேன்; ஏண் - திருவருள் வலிமையும், நாண் - நாணமும், இல்லா நாயினேன் - இல்லாத நாயனையேன், என் கொண்டு எழுகேன் - எதனைத் துணையாகக் கொண்டு உய்வேன்? விளக்கம் : "பாச ஞானத்தாலும் பசு ஞானத்தாலும் பார்ப்பரிய பரம்பரனைப் பதி ஞானத்தாலே நேசமொடும் உள்ளத்தே நாடி" என்று இறைவனைக் காணுமாறு சிவஞான சித்தியாரிலே கூறப்படுகிறது. பாச ஞானம் - கருவிகளைக் கொண்டு அறியும் அறிவு. பசு ஞானம் - உயிர் தன்னை அறியும் அறிவு. பதி ஞானம் - இறைவனது திருவருளே கண்ணாக அறியும் அறிவு. இறைவனைப் பாச ஞான பசு ஞானங்களால் அறியாது பதி ஞானத்தினாலே அறிய வேண்டும்; அவ்வாறு அறியவில்லை என்பார் 'காணுமாறு காணேன்' என்றார். அடிகளை இறைவன் குருவாய் வந்து இனிய சொற்களால் அளவளாவி ஆட்கொண்டது அவனது கருணையால் என்பார், 'பாணே பேசி என்றனைப் படுத்தது என்ன?' என்றார். 'மன்ன என்னையோர் வார்த்தையுட் படுத்துப்பற்றினாய்' என்று பின்னுங் கூறுவார்.
|