202


இறத்தல் உனது திருவருள் வாய்க்கப்பெறாதவர்க்கேயாம். நீ அருள் செய்யாவிடில் அந்நிலையை யானும் அடைந்துவிடுவேன் என்பார், 'செத்தே போயினேன்' என்றார். இது துணிவு பற்றி எதிர்காலம் இறந்த காலமாகச் சொல்லப்பட்டதாகும். மீளப் பிறப்பவரே இறப்பவராவர்; பிறவாதார் முத்தியடைபவராவர் என்க.

உனது திருவருளை இழந்த எனக்கு உய்யும் வழி யாது என்பார், 'என் கொண்டெழுகேன்?' என்றார்.

இதனால், இறைவனைப் பாச ஞான பசு ஞானங்களால் காணாது பதி ஞானத்தாலேயே காண வேண்டும் என்பது கூறப்பட்டது.

84

மானேர் நோக்கி உடையாள் பங்கா மறையீ றறியா மறையோனே
தேனே அமுதே சிந்தைக் கரியாய் சிறியேன் பிழைபொ றுக்கும்
கோனே சிறிதே கொடுமை பறைந்தேன் சிவமா நகர்குறுகப்
போனார் அடியார் யானும் பொய்யும் புறமே போந்தோமே.

பதப்பொருள் : மான் நேர் நோக்கி - மான் போன்ற விழியையுடைய, உடையாள் பங்கா - எம்மை உடையாளை ஒரு கூற்றில் உடையவனே, மறை ஈறு - வேதமுடிவும், அறியா - அறியவொண்ணாத, மறையோனே - மறைப்பொருளானவனே, தேனே - தேனே, அமுதே - அமுதமே, சிந்தைக்கு அரியாய் - மனத்திற்கு அடைய அருமையானவனே, சிறியேன் பிழை பொறுக்கும் கோனே - சிறியேனுடைய குற்றங்களைப் பொறுக்கின்ற இறைவனே, அடியார் - உன் தொண்டர், சிவமாநகர் குறுகப் போனார் - சிவபுரம் அடையப் போனார்கள்; சிறிதே கொடுமை பறைந்தேன் - அடியேன் ஒரு சிறிதே கொடுமை மிகுந்தேன்; (அதனால்) யானும் பொய்யும் - யானும் எனது பொய்யும், புறமே போந்தோம் - புறமே நீங்கினோம்; இனி என் செய்வேன்!

விளக்கம் : சிறிதே கொடுமை பறைந்தது, அடியார் பலரும் இறைவனோடே உடன் சென்ற பொழுது, அடிகள் நிலவுலகை விட்டு நீங்கத் தயங்கியதாதல் கூடும். அப்பிழையைப் பொறுக்க வேண்டும் என்பார், 'சிறியேன் பிழை பொறுக்கும் கோனே' என்றார். பொய்யினை நீக்கி மெய்யே நடமாடுமிடம் சிவமாநகராதலின், அவ்விடத்தில் பொய்யனாகிய யான் புகுதல் கூடாதாயிற்று என்பார், 'யானும் பொய்யும் புறமே போந்தோமே' என்றார். 'பொய்' என்றது, பொய்யான அன்பினை.

இதனால், பொய்யினை நீக்கி மெய்யினை நாடிச் செல்வோரே சிவநகர் அடையலாம் என்பது கூறப்பட்டது.

85

புறமே போந்தோம் பொய்யும் யானும் மெய்யன்பு
பெறவே வல்லேன் அல்லா வண்ணம் பெற்றேன்யான்
அறவே நின்னைச் சேர்ந்த அடியார் மற்றொன் றறியாதார்
சிறவே செய்து வழிவந்து சிவனே நின்தாள் சேர்ந்தாரே.