பதப்பொருள் : சிவனே - சிவபெருமானே, அறவே - முற்றிலும், நின்னைச் சேர்ந்த அடியார் - உன்னை அடைந்த அன்பர், மற்றொன்று அறியாதார் - உன்னை அன்றி வேறொன்றையும் அறியாதவராவர்; அதனால், சிறவே செய்து - சிறப்பான காரியங்களையே செய்து, வழி வந்து - உன் வழியே வந்து, நின்தாள் சேர்ந்தார் - உன் திருவடியை அடைந்தார்கள்; யான் - நான், மெய் அன்பு பெறவே வல்லேன் அல்லா வண்ணம் - உண்மை அன்பைப் பெறுதற்கு அல்லாத முறையினை, பெற்றேன் - அடைந்தேன்; (ஆகையால்) பொய்யும் யானும் புறமே போந்தோம் - என்னுடைய பொய்யும் யானும் புறமாய்விட்டோம்! இதற்கு என் செய்வது! விளக்கம் : இறைவன் திருவடியையன்றி மற்றொரு பற்றும் இல்லாதவர்களே அவனது திருவருளை முற்றிலும் பெற இயலும் ஆதலின், 'அறவே நின்னைச் சேர்ந்த அடியார் மற்றொன்றறி யாதார்' என்றார். சிறவே செய்தலாவது, இறைவனை மனம் மொழி மெய்களால் எஞ்ஞான்றும் நினைத்தலும் வாழ்த்தலும் வழிபடுதலுமாகும். அவ்வாறு செய்தவர்களே திருவருள் வழியில் சென்று அவனை அடைவர் என்பது பற்றி, 'சிறவே செய்து வழி வந்து நின்தாள் சேர்ந்தார்' என்றார். அத்தகைய மெய்யன்பு என்னிடம் இல்லாமையால், யான் இங்கு நின்றுவிட்டேன் என்பார், 'பொய்யும் யானும் புறமே போந்தோம்' என்றார். இதனால், உலக நெறியாகிய பொய்ந்நெறியினை அறவே நீக்கி, இறை நெறியாகிய உண்மை நெறியினைச் சார்ந்தார் இறைவன் திருவடியைப் பெறுவர் என்பது கூறப்பட்டது. 86 தாராய் உடையாய் அடியேற் குன்தா ளிணையன்பு பேரா உலகம் புக்கார் புறமே போந்தேன்யான் ஊரா மிலைக்கக் குருட்டா மிலைத்தாங் குன்தா ளிணையன்புக் காரா அடியேன் அயலே மயல்கொண் டழுகேனே. பதப்பொருள் : உடையாய் - தலைவனே, அடியார் - உன் மெய் அடியார்கள், பேரா உலகம் புக்கார் - மீண்டு வாராத உனது சிவலோகத்தை அடைந்தார்கள்; யான் - நானோ, புறமே போந்தேன் - அதற்குப் புறம்பாகிய இவ்வுலகத்திலே நின்று விட்டேன்; ஆயினும், ஊர் ஆ மிலைக்க - ஊரிலுள்ள கண் உடைய பசுக்கள் கனைக்க (அதைக் கேட்டு), குருட்டு ஆ மிலைத்தாங்கு - குருட்டுப் பசுவும் கனைத்தது போல, உன் தாள் இணை அன்புக்கு - உனது திருவடியிணையில் செல்லும் அன்பைப் பெறுதற்கு, (பக்குவம் வாய்ந்த அடியவர்கள் விரும்புவதைக் கண்டு) ஆரா அடியேன் - பக்குவமில்லாத யான், அயலே - புறம்பே நின்று, மயல் கொண்டு அழுகேன் - பெருவிருப்பம் கொண்டு
|