அழுகின்றேன்; அடியேற்கு - அடியேனாகிய எனக்கு, உன் தாள் இணை அன்பு - உன் திருவடி இணையில் செல்லுகின்ற அந்த அன்பினை, தாராய் - தந்தருள்வாயாக. விளக்கம் : பசுக்கள் மேய்புலத்திலிருந்து திரும்பி வீட்டையடையும் போது வீடு நெருங்கினமை அறிந்து கனைக்கும், கண்ணில்லாத பசு அதனை அறியாதிருந்தும், கண்ணுடைய அவை கனைப்பதைக் கேட்டு கனைக்கும். அது போல, மெய்யடியார்கள் தமக்கு உலகத்தினின்றும் நீங்கி இறைவன் திருவடியை அடையும் நிலை வாய்த்திருத்தலை உணர்ந்து ஞானாசிரியனாய் வந்த அவனிடத்தில் அன்பு செய்தனர். அடிகள் தாம் அதனை உணராது, அவர்கள் அன்பு செய்தலைப் பார்த்துத் தாமும் அன்பு செய்ததாகக் கூறுகின்றாராதலின், 'ஊரா மிலைக்கக் குருட்டா மிலைத்தாங்கு, உன் தாளிணை அன்புக்கு அழுகேன்' என்று கூறினார். 'ஞானத் தால்தொழு வார்சில ஞானிகள் ஞானத் தால்தொழு வேன்உனை நானலேன் ஞானத் தால்தொழு வார்கள் தொழக்கண்டு ஞானத் தால்உனை நானும் தொழுவனே' என்ற திருநாவுக்கரசர் திருவாக்கையும் ஒப்பு நோக்குக. இதனால், பக்குவம் வாய்ந்து ஞானத்தால் தொழுகின்ற அடியவர்களே இறைவனை அடைதல் கூடும் என்பது கூறப்பட்டது. 87 அழுகேன் நின்பால் அன்பாம் மனமாய் அழல்சேர்ந்த மெழுகே அன்னார் மின்னார் பொன்னார் கழல்கண்டு தொழுதே உன்னைத் தொடர்ந்தா ரோடும் தொடராதே பழுதே பிறந்தேன் என்கொண் டுன்னைப் பணிகேனே. பதப்பொருள் : நின்பால் அன்பாம் மனமாய் - உன்னிடத்து உண்மையான அன்புடைய மனத்தராய், அழல் சேர்ந்த மெழுகே அன்னார் - நெருப்பிலிட்ட மெழுகு போல உருகுகின்றவர்களாய், மின் ஆர் - ஒளி நிறைந்த, பொன் ஆர் கழல் கண்டு - பொன் போன்ற உன் திருவடியைப் பார்த்து, தொழுதே உன்னைத் தொடர்ந்தாரோடும் - வணங்கி உன்னைத் தொடர்ந்து வந்தவர்களாகிய அடியாரோடும், தொடராதே - பின்பற்றிச் செல்லாமல், பழுதே பிறந்தேன் - தவறுடையவனாயினேன், என் கொண்டு உன்னைப் பணிகேன் - இனி, எத்துணை கொண்டு உன்னை வணங்குவேன்? அழுகேன் - உனது திருவருளைப் பெறுதற்கு அழுகின்றேன் (எனக்கு இரங்கியருள்வாயாக.)
|