205


விளக்கம் : அன்பு மனத்தவர் இறைவன் கழலிணையைக் கண்டதும் உருகும் தன்மையராதலின், 'அழல் சேர்ந்த மெழுகே அன்னார்' என்றார். இறைவன் திருவடியை அழலினுக்கு உவமிப்பார், 'மின்னார் கழல்' என்றார். அழலினைச் சார்ந்த மெழுகு அதிற்கலந்துவிடுவது போலக் கழலினைச் சார்ந்த அடியாரும் கலந்துவிட்டாராதலின், 'தொழுதே உன்னைத் தொடர்ந்தார்' என்றார். தாம் பின்தங்கினமையால் அடியார் துணையுமின்றி எத்துணை கொண்டு தொடர்வேன் என்பார், 'என் கொண்டுன்னைப் பணிகேனே?' என்றார்.

இதனால், இறைவன் கழலிணையைத் தொடர்ந்து பற்றும் உறுதிப்பாடு வேண்டும் என்பது கூறப்பட்டது.

88

பணிவார் பிணிதீர்த் தருளிப் பழைய அடியார்க்குன்
அணியார் பாதம் கொடுத்தி அதுவும் அரிதென்றால்
திணியார் மூங்கில் அனையேன் வினையைப் பொடியாக்கித்
தணியார் பாதம் வந்தொல்லை தாராய் பொய்தீர் மெய்யானே.

பதப்பொருள் : பொய் தீர் மெய்யானே - பொய்ப்பற்றுகளை ஒழிக்கின்ற மெய்ப்பொருளானவனே, பணிவார் - வணங்குகின்றவர்களாகிய, பழைய அடியார்க்கு - பழமை மிக்க உன் அடியார்களுக்கு, பிணி தீர்த்து அருளி - பிறவிப் பிணியை நீக்கி அருளி, உன் - உனது, அணி ஆர் பாதம் - அழகு பொருந்திய திருவடியை, கொடுத்தி - கொடுத்தருள்கிறாய்; அதுவும் அரிது என்றால் - அதுவும் செய்தற்கு அருமையான உனது திருவருட் செயல்தான் என்றால், திணி ஆர் - வலிமை பொருந்திய, மூங்கில் அனையேன் - மூங்கிலைப் போல உருக்கமற்ற என்னுடைய, வினையை - வினைகளை, பொடி ஆக்கி - நீறு செய்து, ஒல்லை வந்து - விரைவாக வந்து, தணி ஆர் பாதம் தாராய் - குளிர்ச்சி பொருந்திய திருவடியைத் தந்தருள்வாய்.

விளக்கம் : பயன் இரு வகை; ஒன்று, துன்பம் நீங்குவது; மற்றொன்று, இன்பம் பெறுவது. துன்ப நீக்கம் முதற்படி; இன்ப ஆக்கம், அதற்கு அடுத்த படி. துன்பம் நீங்கிய பின்னரே இன்பம் பெற முடியும். இதனைப் பாச நீக்கம், வீடு பேறு என்பர். இறைவன் தன்னை வணங்குவார்க்கு இவ்விரு பயனையும் தருவானாதலின், 'பணிவார் பிணி தீர்த்தருளிப் பாதம் கொடுத்தி' என்றார்.

வினையுடைமையால் நேரே திருவடி பெறுவது அருமையாதலின், 'வினையைப் பொடியாக்கித் தணியார் பாதம் தாராய்' என்றார். மன உருக்கமின்மையின், 'மூங்கில அனையேன்' என்று தம்மை இழித்துக் கூறிக்கொண்டார். மூங்கில் கெட்டியானது, கசிவில்லாதது.