அடியவர்கள் செய்யும் வழிபாட்டிற்கு இறைவன் பயன் தருவதும் அவனது கருணையாலேயன்றி வேறன்று ஆதலின், தம்மை ஆட்கொள்வதும் அக்கருணைக்கு ஏற்புடையதேயாம் என்பார், அதுவும் அரிதென்றால், 'மூங்கில் அனையேன் வினையைப் பொடியாக்கிப் பாதம் தாராய்' என்றார். இதனால், உயிர்களின் வினைகளை அறுத்துத் திருவடி இன்பம் நல்குபவன் இறைவனே என்பது கூறப்பட்டது. 89 யானே பொய்என் நெஞ்சும் பொய்என் அன்பும்பொய் ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும் மானே அருளாய் அடியேன் உனைவந் துறுமாறே. பதப்பொருள் : தேனே - தேன் போன்றவனே, அமுதே - அமுதம் போன்றவனே, கரும்பின் தெளிவே - கருப்பஞ்சாற்றின் தேறல் போன்றவனே, தித்திக்கும் - அடியார்களுக்கு இனிக்கின்ற, மானே - பெரியோனே, என் நெஞ்சும் பொய் - என் மனமும் வஞ்சமுடையது; என் அன்பும் பொய் - நான் செய்கின்ற அன்புச் செயலும் போலியானது; (அதனால்) யான் பொய்யே - யான் முற்றிலும் பொய்ம்மை உடையனே; ஆனால் - அவ்வாறாயின், வினயேன் - தீவினையுடையேன், அழுதால் - உன்னைப் பெற விரும்பி அழுதால் மட்டும், உன்னைப் பெறலாமே - உன்னை நான் அடைதல் கூடுமோ? அடியேன் - தொண்டனேன், உனை வந்து உறும் ஆறு - உன்னை வந்து அடையும்வண்ணம், அருளாய் - திருவுளம் இரங்கியருள்வாய். விளக்கம் : இறைவனிடத்தில் உண்மையான அன்பு இல்லாது அவனை அடைய விரும்பினால் அது கை கூடாது என்பார், 'அழுதால் உன்னைப் பெறலாமே' என்றார். ஏகாரம் எதிர்மறைப்பொருளில் வந்தது. இனி, ஏகாரத்தை அசைநிலை அல்லது தேற்றமாகக் கொண்டு, அழுதால் பெறுதல் கூடும் என்றும் பொருள் கூறுவர். அவர்கள் அழுதல் என்பதற்குப் பொய் அன்பு நீங்கி மெய் அன்பு பெற்று மனம் கசிந்து உருகுதல் என்பது கருத்தாகக் கொள்வர். இதனால், உண்மையன்பே இறைவனை அடைவிக்கும் என்பது கூறப்பட்டது. 90 10. ஆனந்தாதீதம் பேரின்பத்தில் தன்னை மறந்த நிலை நீங்காதிருத்தல் ஆனந்தாதீதம் என்பதாம்.
|