207


மாறி லாதமாக் கருணை வெள்ளமே
வந்து முந்திநின் மலர்கொள் தாளிணை
வேறி லாப்பதப் பரிசு பெற்றநின்
மெய்மை அன்பருள் மெய்மை மேவினார்
ஈறி லாதநீ எளியை யாகிவந்
தொளிசெய் மானுட மாக நோக்கியும்
கீறி லாதநெஞ் சுடைய நாயினேன்
கடையன் ஆயினேன் பட்ட கீழ்மையே

பதப்பொருள் : மாறு இலாத மா கருணை வெள்ளமே - மாற்றமில்லாத பேரருட்பெருக்கே, நின் - உன்னுடைய, மலர் கொள் தாளிணை - மலர்களைப் போன்ற திருவடிக்கண், வேறு இலாப் பதம் - நீங்குதல் இல்லாத நிலைமை ஆகிய, பரிசு பெற்ற - பேற்றினைப் பெற்ற, நின் மெய்மை அன்பர் - உன்னுடைய உண்மை அன்பர், முந்தி வந்து - எனக்கு முன்னே வந்து, உன் மெய்மை மேவினார் - உன்னுடைய திருவடி இன்பத்தைப் பெற்றனர்; ஈறு இலாத நீ - அந்தமில்லாத நீ, எளியை ஆகி வந்து - குரு வடிவில் எளிவந்தருளி, ஒளி செய் மானுடமாக - யான் ஞானத்தையுடைய மனிதனாகும்படி, நோக்கியும் - அருட் பார்வையால் பார்த்த பின்பும், கீறிலாத நெஞ்சுடைய - பிளவுபடாத வலிய, நெஞ்சத்தையுடைய, நாயினேன் - நாய் போன்றவனாகிய நான், கடையன் ஆயினேன் - உலகியலில் தாழ்ந்து கடைப்பட்டவனாயினேன்; பட்ட கீழ்மை - யான் அடைந்த இந்த இழிவு (மிகவும் வருந்தத்தக்கது.)

விளக்கம் : இறைவன் வற்றாத கருணை உடையவன் ஆதலின், 'மாறிலாத மாக்கருணை வெள்ளம்' ஆயினான். குருவாய் எழுந்தருளி நயன தீக்கை செய்தும் மன உருக்கம் இல்லை என்பார், 'ஒளி செய்மானுடமாக நோக்கியும் கடையனாயினேன்' என்றார்.

இதனால், இறைவன் குருவாய் எழுந்தருளி ஆட்கொண்ட பின்பும், அதி தீவிர பக்குவம் உடையவர்களே அவனது திருவடி இன்பத்தை விரைந்து பெறுவார்கள் என்பது கூறப்பட்டது.

91

மையி லங்குநற் கண்ணி பங்கனே
வந்தெ னைப்பணி கொண்ட பின்மழக்
கையி லங்குபொற் கிண்ண மென்றலால்
அரியை என்றுனைக் கருது கின்றிலேன்
மெய்யி லங்குவெண் ணீற்று மேனியாய்
மெய்ம்மை அன்பர்உன் மெய்ம்மை மேவினார்
பொய்யி லங்கெனைப் புகுத விட்டுநீ
போவ தோசொலாய் பொருத்த மாவதே.