209


திருமேனியை உடையவனே, எம்பிரான் - எங்கள் தலைவனே, பொருத்தம் இன்மையேன் - (உன் திருவருளைப் பெறுவதற்குத்) தகுதியில்லாதேன், பொய்மை உண்மையேன் - நிலையாதவற்றின் மீது பற்றுடையேன், எனைப் போத என்று - அத்தகைய என்னை வருக என்று அழைத்து, புரிந்து நோக்கவும் - விருப்பத்துடன் திருவருட்பார்வை நல்கவும், வருத்தம் இன்மையேன் - (உன்னோடு வருதற்குரிய) கவலை இல்லாதேன், வஞ்சம் உண்மையேன் - உலகிலிருக்கும் கள்ள எண்ணமுடையேன், மாண்டிலேன் - உனது பிரிவை ஆற்றாது இறந்தேனில்லை, அருள் செய் அன்பரும் - நீ அருள் செய்யப்பெற்ற அடியாரும், நீயும் - நீயும், அங்கு எழுந்தருளி - அவ்வுலகிற்கு எழுந்தருளி, என்னை இங்கு இருத்தினாய் - என்னை இவ்வுலகத்தில் இருத்திவிட்டாய், முறையோ - இது நியாயமோ? வம்பனேன் - பயனிலியாகிய எனது, வினைக்கு இறுதி இல்லை - வினைக்கு முடிவு காணேன்.

விளக்கம் : பொருத்தமாவது, சரியை முதலிய உண்மைத்தவ ஒழுக்கமாகும். பொய்மையாவது, நிலையாதனவற்றை நிலையின என்று உணர்வதாகும். பிராரத்த வினையே இறைவனுடன் செல்லாது தடுத்தது எனவும், அதன்வழி ஆகாமியம் வளர்ந்து மேலும் பிறவி வருமோ எனவும் கருதி, 'வம்பனேன் வினைக்கிறுதி இல்லையே' என்றார்.

இதனால், வினை நீங்கப்பெற்ற அடியார் இறைவன் அடியை அவன் ஆட்கொண்டவுடன் சேர்வார் என்பது கூறப்பட்டது.

93

இல்லை நின்கழற் கன்ப தென்கணே
ஏலம் ஏலும்நற் குழலி பங்கனே
கல்லை மென்கனி ஆக்கும் விச்சைகொண்
டென்னை நின்கழற் கன்ப னாக்கினாய்
எல்லை இல்லைநின் கருணை எம்பிரான்
ஏது கொண்டுநான் ஏது செய்யினும்
வல்லை யேஎனக் கின்னும் உன்கழல்
காட்டி மீட்கவும் மறுவில் வானனே.

பதப்பொருள் : மறு இல் வானனே - குற்றமற்ற பரவெளியில் உள்ளவனே, ஏலம் ஏலும் - மயிர்ச்சாந்து பொருந்திய, நல்குழலி பங்கனே - அழகிய கூந்தலையுடைய தேவியை ஒருபால் உடையவனே, எம்பிரான் - எம் பெருமானே, நின் கழற்கு அன்பு - உன்னுடைய திருவடிக்குரிய அன்பு, என்கண் இல்லை - என்னிடம் இல்லை; (எனினும்) கல்லை மென்கனி ஆக்கும் - கல்லை மெல்லிய பழமாகச் செய்கின்ற, விச்சை கொண்டு - வித்தையைக் கொண்டு, என்னை நின் கழற்கு - என்னை