212


விளக்கம் : உயிர்களின் பிறப்புக்கு அவை செய்கின்ற நல்வினை தீவினையே காரணம். அது முதல் உற்பவத்தில் இல்லாமையால், 'விச்ச தின்றியே விளைவு செய்குவாய்' என்றார்.

பிறப்பை எடுத்துச் செய்கின்ற நல்வினை தீவினைகள் உயிர்களுக்கு அனாதியில் இல்லாவிடினும், அனாதி கேவல நிலையில் உள்ள உயிர்களுக்கு மாயா காரியமாகிய சூக்கும தேகத்தை இறைவன் கூட்டிய பொழுது அவ்வவற்றின் ஆணவமலத் தன்மைகளுக்கு ஏற்ப, அவற்றுக்கு விருப்பு வெறுப்புகள் வேறு வேறு வகையாய் நிகழும். அந்நிகழ்ச்சிக்கு ஏற்பத் தூல தேகங்கள் தரப்படும். இது முதல் உற்பவத்தின் நிலை. பின்பின் பிறப்புகளில் உயிர்கள் செய்கின்ற நல்வினை தீவினைகளுக்கு ஏற்ப இறைவன் பிறப்புகளைத் தருவான். இது புனர் உற்பவத்தின் நிலை. இவற்றின் வேறுபாடு அறிந்துகொள்ளத் தக்கது.

உலகத்தவர் பேணி வளர்த்த மரம் நஞ்சு மரமாயினும், வெட்டி அழிக்கத் துணியார். அதைப் போல, உன்னால் ஆட்கொள்ளப்பட்ட யான் அன்பில்லாதவனாயினும் என்னை ஒதுக்கித் தள்ளலாகாது என்பார், 'நானும் அங்ஙனே உடைய நாதனே' என்றார்.

இதனால், இறைவன் சர்வ வல்லமையுள்ளவன் என்பது கூறப்பட்டது.

96

உடைய நாதனே போற்றி நின்னலால்
பற்று மற்றெனக் காவ தொன்றினி
உடைய னோபணி போற்றி உம்பரார்
தம்ப ராபரா போற்றி யாரினும்
கடைய னாயினேன் போற்றி என்பெருங்
கருணை யாளனே போற்றி என்னைநின்
அடியன் ஆக்கினாய் போற்றி ஆதியும்
அந்தம் ஆயினாய் போற்றி அப்பனே.

பதப்பொருள் : உடைய நாதனே போற்றி - என்னை ஆளுடைய தலைவனே வணக்கம்; நின் அலால் - உன்னையன்றி, எனக்கு - அடியேனுக்கு, ஆவது பற்று மற்று ஒன்று - ஆதாரமாகிய பொருள் வேறு ஒன்றை, இனி உடையனோ - இனியுடையேனோ? பணி - சொல்வாய்; போற்றி - வணக்கம்; உம்பரார்தம் பராபரா போற்றி - தேவர் கோமானே வணக்கம்; யாரினும் கடையன் ஆயினேன் - யான் எல்லாரினும் கடையனாகிவிட்டேன்; போற்றி - வணக்கம்; என் பெருங்கருணையாளனே போற்றி - என் பேரருளானவனே வணக்கம்; என்னை நின் அடியன் ஆக்கினாய் - என்னை உன் தொண்டனாகச் செய்தாய்; போற்றி - வணக்கம்; ஆதியும் அந்தம் ஆயினாய் - முதலும் இறுதியுமானவனே, அப்பனே - எம் தந்தையே, போற்றி - வணக்கம்.