அரசே - தலைவனே, செய்யவனே - செம்மேனியனே, சிவனே - மங்கலப் பொருளானவனே, சிறியேன் பவம் தீர்ப்பவனே - சிறியேனது பிறவியை நீக்குவோனே, பொய்யவனேனை - பொய்யவனாகிய என்னை, பொருள் என ஆண்டு - ஒரு பொருளாகக் கருதி ஆண்டருளி, ஒன்று பொத்திக்கொண்ட - என் சிறுமையை மறைத்துக்கொண்ட, மெய்யவனே - உண்மைப் பொருளே, விட்டிடுதி - விட்டுவிடுவாயோ! விளக்கம் : இறைவன் அடிகளை ஆட்கொண்ட பொழுது அவரது குற்றங்களைக் கருதவில்லை என்பார், 'ஆண்டொன்று பொத்திக்கொண்ட மெய்யவனே' என்றார். இப்பொழுதும் அவ்வாறு எனது பிழையைக் கருதலாகாது என்பார், 'விட்டிடுதி கண்டாய்' என்றார். 'விடமுண் மிடற்று மெய்யவனே' என்றதும் இக்குறிப்பை வெளிப்படுத்துவதாகும். இதனால், இறைவன் அடியார்களது சிறுமையைப் பொறுத்துக்கொள்வான் என்பது கூறப்பட்டது. 7 தீர்க்கின்ற வாறென் பிழையைநின் சீரருள் என்கொலென்று வேர்க்கின்ற என்னை விடுதிகண் டாய்விர வார்வெருவ ஆர்க்கின்ற தார்விடை உத்தர கோசமங் கைக்கரசே ஈர்க்கின்ற அஞ்சொடச் சம்வினை யேனை இருதலையே. பதப்பொருள் : விரவார் வெருவ - பகைவர் அஞ்சும்படி, ஆர்க்கின்ற - ஒலிக்கின்ற, தார் - கிண்கிணி மாலை அணிந்த, விடை - காளையையுடைய, உத்தரகோசமங்கைக்கு - திருவுத்தரகோச மங்கைக்கு, அரசே - தலைவனே, அஞ்சொடு அச்சம் - ஐம்புல ஆசைகளும் உன் திருவடியை நீங்குகின்ற அச்சமும், வினையேனை - தீவினையுடையேனை, இருதலை - இரண்டு பக்கத்திலும், ஈரக்கின்ற - இழுக்கின்றன; ஆதலின், என் பிழையை - என் குற்றங்களை, நின் சீர் அருள் - உன் பேரருளானது, தீர்க்கின்ற ஆறு என் என்று - நீக்குகின்ற விதம் எவ்வாறு என்று, வேர்க்கின்ற என்னை - மனம் புழுங்குகின்ற என்னை, விடுதி - விட்டுவிடுவாயோ! விளக்கம் : உலகில் வாழ்கின்றமையால் ஐம்புல ஆசை ஒரு புறம் இழுத்துச் செல்கிறது. அவ்வாசை வழியே ஒழுகினால் என்ன விளையுமோ என்ற அச்சம் மற்றொரு புறமும் இழுக்கிறது. ஆக, ஆசை ஒரு புறமும், அச்சம் மற்றொரு புறமும் இழுக்கின்றன என்பார், 'ஈர்க்கின்ற அஞ்சொடச் சம்வினையேனை இருதலையே' என்றார். இதற்குக் காரணம் வினை என்பார், 'வினையேனை' என்றார். இதனால், இறைவன் திருவருளே நிலையான பேற்றைத் தர வல்லது என்பது கூறப்பட்டது. 8
|