222


இருதலைக் கொள்ளியின் உள்ளெறும் பொத்து நினைப்பிரிந்த
விதிதலை யேனை விடுதிகண் டாய்வியன் மூவுலகுக்
கொருதலை வாமன்னும் உத்தர கோசமங் கைக்கரசே
பொருதலை மூவிலை வேல்வலன் ஏந்திப் பொலிபவனே.

பதப்பொருள் : வியன் - பெருமை அமைந்த, மூ உலகுக்கு - மூன்று உலகங்களுக்கும், ஒரு தலைவா - ஒப்பற்ற முதல்வனே, மன்னும் - நிலைபெற்ற, உத்தரகோச மங்கைக்கு - திருவுத்தர கோச மங்கைக்கு, அரசே - தலைவனே, பொரு - போர்க்குரிய, தலை - நுனியோடு கூடிய, மூவிலை வேல் - மூன்று இலை வடிவினதாகிய சூலத்தை, வலன் ஏந்தி - வலப்பக்கத்தில் தாங்கி, பொலிபவனே - விளங்குபவனே, இருதலைக் கொள்ளியின் உள் - இருபுறமும் எரிகின்ற கொள்ளிக்கட்டையின் உள்ளிடத்தே அகப்பட்ட, எறும்பு ஒத்து - எறும்பு போன்று துயருற்று, நினைப் பிரிந்த - உன்னை விட்டு நீங்கின, விரிதலையேனை - தலை விரிகோலம் உடையனை, விடுதி - விட்டுவிடுவாயோ!

விளக்கம் : இருபுறமும் எரிகின்ற கொள்ளிக்கட்டையின் உள்ளே அகப்பட்ட எறும்பு இரு புறமும் ஓடி உய்தல் அறியாது கெட்டு அழியும். அதைப் போல, உலக ஆசை ஒரு புறமும் உன்னை அடைய வேண்டமென்ற ஆர்வம் மற்றொரு புறமும் இழுக்க, உய்தல் அறியாது கெட்டு அழிகின்றேன் என்பார், 'இருதலைக் கொள்ளியினுள்ளெறும் பொத்து' என்றார்.

மூவுலகு என்றது; மேல் கீழ் நடு என்ற மூன்று உலகங்களை.

இதனால், இறைவனால் ஆட்கொள்ளப்படடுப் பின் பிரிந்த உயிர், இருதலைக்கொள்ளியின் உள்ளே அகப்பட்ட எறும்பு போல உழலும் என்பது கூறப்பட்டது.

9

பொலிகின்ற நின்தான் புகுதப்பெற் றாக்கையைப் போக்கப்பெற்று
மெலிகின்ற என்னை விடுதிகண் டாய்அளி தேர்விளரி
ஒலிகின்ற பூம்பொழில் உத்தர கோசமங் கைக்கரசே
வலிநின்ற திண்சிலை யாலெரித் தாய்புரம் மாறுபட்டே.

பதப்பொருள் : அளி - வண்டுகள், தேர் - ஆராய்ந்து பாடுகிற, விளரி ஒலிகின்ற - விளரி இசையின் ஒலியானது இடையறாது நிலை பெற்றிருக்கிற, பூம்பொழில் - பூஞ்சோலைகள் சூழ்ந்த, உத்தரகோச மங்கைக்கு - திருவுத்தரகோச மங்கைக்கு, அரசே - தலைவனே, மாறுபட்டு - பகைத்து, புரம் - முப்புரங்களை, வலி நின்ற திண்சிலையால் - வலிமை நிலைத்த உறுதியான வில்லினால், எரித்தாய் - அழித்தவனே, பொலிகின்ற - விளங்குகின்ற, நின் தாள் - உன் திருவடிகளில், புகுதப்பெற்று - புகப்பெற்று, ஆக்கையைப் போக்கப் பெற்றும் - உடம்பை