223


உன்னுடையதாகவே கொடுக்கப்பெற்றும், மெலிகின்ற - வருந்துகின்ற, என்னை - அடியேனை, விடுதி - விட்டுவிடுவாயோ!

விளக்கம் : விளரி - ஏழு இசைகளுள் ஒன்று. திரிபுரத்தை அழிக்கச் சென்ற போது இறைவன் மேரு மலையை வில்லாகக் கொண்டு சென்றான் ஆதலால், 'வலிநின்ற திண்சிலை யாலெரித்தாய் புரம் மாறுபட்டே' என்றார். இறைவன் ஞானாசிரியனாய் வந்து அடிகளை ஆட்கொண்ட பொழுதே அவர் தமது உடல் பொருள் ஆவி அனைத்தையும் அவனுடையவாகக் கொடுத்தார் ஆதலின், 'நின்தாள் புகுதப் பெற்று ஆக்கையைப் போக்கப் பெற்றும்' என்றார். 'அன்றே என்றன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும் - குன்றே யனையாய் என்னை யாட்கொண்ட போதே கொண்டிலையோ' என்று பின்னரும் கூறுவார். இவ்வாறு செய்தும் இன்னமும் உலக மாயையில் மயங்குகின்றேன் என்பார், மெலிகின்ற என்னை' என்றார்.

இதனால், இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட பின்பும் உலக வாசனை தாக்கும் என்பது கூறப்பட்டது.

10

மாறுபட் டஞ்சென்னை வஞ்சிப்ப யான்உன் மணிமலர்த்தாள்
வேறுபட் டேனை விடுதிகண் டாய்வினை யேன்மனத்தே
ஊறும்மட் டேமன்னும் உத்தர கோசமங் கைக்கரசே
நீறுபட் டேயொளி காட்டும்பொன் மேனி நெடுந்தகையே.

பதப்பொருள் : வினையேன் மனத்து - தீவினையேனது மனத்தின்கண், ஊறும் - சுரக்கின்ற, மட்டே - தேனே, மன்னும் - நிலைபெற்ற, உத்தரகோச மங்கைக்கு - திருவுத்தரகோச மங்கைக்கு, அரசே - தலைவனே, நீறுபட்டு - திருவெண்ணீறு பூசப்பட்டு, ஒளி காட்டும் - ஒளியைச் செய்கின்ற, பொன் மேனி - பொன் போலும் திருமேனியையுடைய, நெடுந்தகையே - பெருந்தன்மையனே, அஞ்சு - ஐம்பொறிகள், மாறுபட்டு - பகைத்து, என்னை வஞ்சிப்ப - என்னை வஞ்சித்தலால், யான் - நான், உன் - உனது, மணி - வீரக்கழலணிந்த, மலர் - தாமரை மலரையொத்த, தாள் - திருவடியை, வேறுபட்டேனை - நீங்கினேன்; அத்தகைய என்னை, விடுதி - அங்ஙனமே விட்டுவிடுவாயோ!

விளக்கம் : இறைவனை எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் உள்ளத்திலே இன்பம் பெருகுமாதலின், 'மனத்தே ஊறும் மட்டே' என்றார். 'நினைத்தொறும் உள்நெக ஆனந்தத்தேன் சொரியும் குனிப்புடையான்' என்று அடிகள் பின்னரும் கூறுவார். 'உருகு மனத்து அடியவர்கட்கு ஊறும்தேனை' என்ற திருநாவுக்கரசர் திருவாக்கையும் காண்க.