'அஞ்சு' ஆகுபெயராய் ஐந்து பொறிகளைக் குறிக்கும். வஞ்சித்தலாவது, இன்பம் செய்வது போல விடயங்களை நுகர்வித்துப் பிறவித் துன்பத்தில் செதுத்துதல். 'மாறி நின்றென்னை மயக்கிடும் வஞ்சப்புலன் ஐந்தின் வழி' என அடிகள் பின்னரும் கூறுவார். இதனால், ஐம்பொறிகளும் இறைவன் இன்பத்தைக்காட்டிலும் இன்பம் செய்வது போலத் துன்பமே செய்யும் என்பது கூறப்பட்டது. 11 நெடுந்தகை நீஎன்னை ஆட்கொள்ள யான்ஐம் புலன்கள்கொண்டு விடுந்தகை யேனை விடுதிகண் டாய்விர வார்வெருவ அடுந்தகை வேல்வல்ல உத்தர கோசமங் கைக்கரசே கடுந்தகை யேன் உண்ணும் தெண்ணீர் அமுதப் பெருங்கடலே. பதப்பொருள் : விரவார் வெருவ - பகைவர் அஞ்சும்படி, அடும்தகை - கொல்லுந்தன்மையுள்ள, வேல் வல்ல - வேற்போரில் வல்லவனாகிய, உத்தரகோச மங்கைக்கு - திருவுத்தர கோச மங்கைக்கு, அரசே தலைவனே, கடுந்தகையேன் - கொடிய தன்மையுடையேன், உண்ணும் - பருகுதற்குரிய, தெள்நீர் - தெளிந்த தன்மையுடைய, அமுதப் பெருங்கடலே - பெரிய அமுதக் கடலே, நெடுந்தகை - பெருந்தன்மையனே, நீ என்னை ஆட்கொள்ள - நீ என்னை அடிமை கொள்ளவும், யான் - நான், ஐம்புலன்கள் கொண்டு - ஐம்புல ஆசை கொண்டு, விடும் தகையேனை - அதனால் உன்னை விடும் தன்மையனாயினேன்; அத்தகைய என்னை, விடுதி - விட்டுவிடுவாயோ! விளக்கம் : கருணையாளனாகிய நீ உனது பெருந்தன்மையால் என்னை ஆட்கொண்டாய் என்பார், 'நெடுந்தகை நீ என்னை ஆட்கொள்ள' என்றும், அங்ஙனமாயினும் எனது சிறுமையால் யான் உன்னை விடுத்து உலகத்தில் உள்ளேன் என்பார், 'ஐம்புலன்கள் கொண்டு விடுந்தகையேனை' என்றும் கூறினார். இதனால், உலக இன்பத்தில் மயங்கி இறைவன் திருவருளை மறத்தல் கூடாது என்பது கூறப்பட்டது. 12 கடலினுள் நாய்நக்கி யாங்குன் கருணைக் கடலின்உள்ளம் விடலரி யேனை விடுதிகண் டாய்விட லில்லடியார் உடல்இல மேமன்னும் உத்தர கோசமங் கைக்கரசே மடலின்மட் டேமணி யேஅமு தேஎன் மதுவெள்ளமே. பதப்பொருள் : விடல் இல் அடியார் - உன் திருவடியை விடுதல் இல்லாத அடியாரது, உடல் இலமே மன்னும் - உடலாகிய வீட்டின்கண்ணே நிலைபெறுகின்ற, உத்தரகோச மங்கைக்கு - திருவுத்தரகோச மங்கைக்கு, அரசே - தலைவனே, மடலின் மட்டே - பூந்தேனே, மணியே - மாணிக்கமே, அமுதே -
|