வேறில்லை என்பதையே இங்கு உவமையால் விளக்கினார். இவ்வாறே பட்டினத்தடிகள் திருவிடைமருதூர் மும்மணிக் கோவையுள், "நின்னது குற்றம் உளதோ . . . . பாவிகள் தமதே பாவம்" என்று எடுத்துப் பல உவமைகளால் விரித்து விளக்கினார். 'விள்ளக்கில்' என்பதில் 'கில்' ஆற்றல் உணர்த்துவது; ககர ஒற்று விரித்தல் விகாரம். இதுகாறும் அனுபவித்த உலக இன்பம் பொறி புலன்களின் உதவியால் அனுபவித்த இன்பம்; இறைவன் இன்பம் அத்தகையது அன்றாதலின், அதனைக் 'களியாத களி' என்றார். இதனால், இறைவனது பேரின்பத்தை அனுபவியாதது உயிர்களின் குற்றமேயன்றி, இறைவன் குற்றம் அன்று என்பது கூறப்பட்டது. 14 களிவந்த சிந்தையொ டுன்கழல் கண்டும் கலந்தருள வெளிவந்தி லேனை விடுதிகண் டாய்மெய்ச் சுடருக்கெல்லாம் ஒளிவந்த பூங்கழல் உத்தர கோசமங் கைக்கரசே எளிவந்த எந்தை பிரான்என்னை ஆளுடை என்னப்பனே. பதப்பொருள் : மெய்ச்சுடருக்கு எல்லாம் - உண்மையான ஒளிகட்கெல்லாம், ஒளி வந்த - ஒளியைத் தந்த, பூங்கழல் பொலிவாகிய திருவடியையுடைய, உத்தரகோச மங்கைக்கு திருவுத்தரகோச மங்கைக்கு, அரசே - தலைவனே, எளிவந்த - எனக்கு எளிதில் கிடைத்த, எந்தை பிரான் - எனக்குத் தந்தையும் தலைவனும் ஆகியவனே, என்னை ஆள் உடை என் அப்பனே - என்னை அடிமையாகவுடைய என் ஞானத் தந்தையே, களிவந்த சிந்தையொடு - மகிழ்வோடு கூடிய மனத்தோடு, உன் கழல் கண்டும் - உன் திருவடியைக் காணப்பெற்றும், கலந்து அருள - நீ என்னோடு கலந்து அருள் செய்யுமாறு, வெளி வந்திலேனை - உலகப் பற்றிலிருந்தும் வெளிவாராத என்னை, விடுதி - விட்டுவிடுவாயோ! விளக்கம் : மெய்ச்சுடராவன, இயற்கையில் ஒளியுடைய சூரியன் போன்ற ஒளி மண்டிலங்கள். அவற்றுக்கும் அவ்வொளியைத் தந்தவன் இறைவனாதலின், 'சுடருக்கெல்லாம் ஒளி வந்த பூங்கழல்' என்றார். திருவடிக் காட்சி பெற்ற பின்னரும் உலகப்பற்றை யான் விடவில்லை என்று வருந்துவார், 'கழல் கண்டும் கலந்தருள வெளி வந்திலேனை' என்றார். இதனால், திருவடிக்காட்சி பெற்றவர் உலகக் காட்சியை நீக்குதல் வேண்டும் என்பது கூறப்பட்டது. 15
|