என்னைஅப் பாஅஞ்சல் என்பவர் இன்றிநின் றெய்த்தலைந்தேன் மின்னைஒப் பாய்விட் டிடுதிகண் டாய்உவ மிக்கின்மெய்யே உன்னைஒப் பாய்மன்னும் உத்தர கோசமங் கைக்கரசே அன்னைஒப் பாய் எனக் கத்தன்ஒப் பாய்என் அரும்பொருளே. பதப்பொருள் : மெய் உவமிக்கின் - உனது திருமேனிக்கு உவமை சொல்லின், மின்னை ஒப்பாய் - மின்னலை ஒப்பாய், உன்னை ஒப்பாய் - உனக்கு நீயே நிகராவாய், மன்னும் - நிலை பெற்றிருக்கின்ற, உத்தரகோச மங்கைக்கு - திருவுத்தரகோச மங்கைக்கு, அரசே - தலைவனே, எனக்கு அன்னை ஒப்பாய் - எனக்குத் தாயை ஒப்பாய், அத்தன் ஒப்பாய் - தந்தையை ஒப்பாய், என் அரும்பொருளே - எனக்குக் கிடைத்தற்கு அரிய பொருளே, என்னை - அடியேனை, அப்பா அஞ்சல் என்பவர் இன்றி நின்று - 'அப்பா பயப்படாதே!' என்று சொல்லுவார் இல்லாமல் நின்று, எய்த்து அலைந்தேன் - இளைத்துத் திரிந்தேன்; விட்டிடுதி - விட்டுவிடுவாயோ! விளக்கம் : 'உன்னை ஒப்பாய்' என்றது, இறைவனுக்கு நிகராவார் வேறொருவரும் இல்லை என்றபடி. 'தாமே தமக்கு ஒப்பு மற்றில்லவர்' என்றார் திருக்கோவையாரிலும். உலகியற் பொருள்களில் சிறந்த உவமை கூறுவார், 'அன்னை ஒப்பாய் எனக் கத்தன் ஒப்பாய்' என்றார். இளைப்பு நீக்கி அஞ்சேல் என்று அருளுபவன் இறைவனாதலின், 'அஞ்சல் என்பவர் இன்றி நின்றெய்த்தலைந்தேன்; விட்டிடுதி' என்று வேண்டுகிறார். இதனால், உயிர்கள் இளைத்த நேரத்தில் அஞ்சேல் என்று வந்து அருள் செய்பவன் அம்மையப்பனாகிய இறைவனே என்பது கூறப்பட்டது. 16 பொருளே தமியேன் புகலிட மேநின் புகழ்இகழ்வார் வெருளே எனைவிட் டிடுதிகண் டாய்மெய்மை யார்விழுங்கும் அருளே அணிபொழில் உத்தர கோசமங் கைக்கரசே இருளே வெளியே இகபர மாகி இருந்தவனே. பதப்பொருள் : மெய்மையார் விழுங்கும் - உண்மை அன்பர் விழுங்கும், அருளே - அருட்கனியே, அணி பொழில் - அழகிய சோலை சூழ்ந்த, உத்தர கோச மங்கைக்கு - திருவுத்தரகோச மங்கைக்கு, அரசே - தலைவனே, இருளே - இருளாய் இருப்பவனே, வெளியே - ஒளியாய் இருப்பவனே, இகபரம் ஆகி இருந்தவனே - இம்மை மறுமைகளாகி இருந்தவனே, பொருளே - உண்மைப் பொருளானவனே, தமியேன் புகலிடமே - தனியனாகிய எனக்குச் சரண் புகும் இடமே, நின் புகழ் இகழ்வார் - உன் புகழை நிந்திப்பவர்க்கு, வெருளே - அச்சத்துக்குக் காரணமாய் இருப்பவனே, எனை விட்டிடுதி - என்ன விட்டுவிடுவாயோ!
|