விளக்கம் : கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியாதலின், 'மெய்மையார் விழுங்கும் அருளே' என்றார். உயிர்களுக்கு மறைப்பையும் அருளையும் செய்பவன் என்பார், 'இருளே வெளியே' என்றார். 'சோதியனே துன்னிருளே' என்று முன்னும் கூறினார். உலகில் காணப்படும் பொருள்களெல்லாம் பொருள் அல்ல; இறைவன் ஒருவனே உண்மைப்பொருளாதலின், 'பொருளே' என்றதற்கு மெய்ப்பொருள் என்று உரைக்கப்பட்டது. வெருள் - அச்சம். அச்சத்துக்குக் காரணமானவனை அச்சம் என்றே கூறினார். 'மெய்யன்பர் விழுங்கும் 'கனி' என்றும், 'தமியேன் புகலிடம்' என்றும் 'இகழ்வார்க்கு வெருள்' என்றும் கூறியது, அடியேன் உன்னைப் போற்றுகின்றவனேயன்றி இகழ்கின்றவனல்லேனாதலின், என்னை விடுதல் கூடாது என்னும் குறிப்புடையதாம். இதனால், புகலிடமாக அடைந்தவரை இறைவன் கைவிடமாட்டான் என்பது கூறப்பட்டது. 17 இருந்தென்னை ஆண்டுகொள் விற்றுக்கொள் ஒற்றிவை என்னினல்லால் விருந்தின னேனை விடுதிகண் டாய்மிக்க நஞ்சமுதா அருந்தின னேமன்னும் உத்தர கோசமங் கைக்கரசே மருந்தின னேபிற விப்பிணிப் பட்டு மடங்கினர்க்கே. பதப்பொருள் : மிக்க நஞ்சு - மிகுதியாகிய நஞ்சை, அமுது ஆ - அமுதமாக, அருந்தினனே - உண்டவனே, மன்னும் - நிலைபெற்ற, உத்தர கோச மங்கைக்கு - திருவுத்தரகோச மங்கைக்கு, அரசே - தலைவனே, பிறவிப் பிணிப் பட்டு மடங்கினர்க்கு - பிறவியாகிய நோயிற்சிக்கி முடங்கிக் கிடந்தவர்க்கு, மருந்தினனே - மருந்தாய் இருப்பவனே, இருந்து - எழுந்தருளியிருந்து, என்னை - அடியேனை, ஆண்டுகொள் - ஆண்டுகொள்வாய், விற்றுக்கொள் - விற்றுக்கொள்வாய், ஒற்றிவை - ஒற்றிவைப்பாய், என்னின் அல்லால் - என்ற இவை போன்ற செயல்களில் என்னை உனக்கு உரியவனாகக் கொள்வதல்லது, விருந்தினனேனை - புதிய அடியானாகிய என்னை, விடுதி - விட்டுவிடுவாயோ! விளக்கம் : இறைவன் மருந்தாய் இருந்து, தீராத நோயாகிய பிறவியைத் தீர்க்க வல்லவனாதலின், 'பிறவிப் பிணிபட்டு மடங்கினர்க்கு மருந்தினனே' என்றார். 'மந்திரமுந் தந்திரமும் மருந்துமாகித் தீராநோய் தீர்த்தருள வல்லான்' என்ற திருநாவுக்கரசர் திருவாக்கையும் காண்க. ஆண்டுகொள்ளுதல் - தனக்கே அடிமையாகக் கொள்ளுதல். விற்றுக்கொள்ளுதல் - பிறருக்கு விற்பனை செய்தல். ஒற்றிவைத்தல் - பிறருக்கு அடைமானம் வைத்தல். இம்மூன்றையும்
|