செய்ய உரிமையுள்ளவன் இறைவனாதலின், 'இருந்தென்னை ஆண்டுகொள் விற்றுக்கொள் ஒற்றிவை' என்றார். 'என்னின் அல்லால் விடுதி கண்டாய்' எனச் சேர்த்து முடிவு கொள்க. ஞானாசிரியனோடு வந்த அடியார் பழவடியார்களாதலின், தம்மை 'விருந்தினன்' என்றார். இதனால், இறைவன் சர்வ சுதந்தரம் உடையவன் என்பது கூறப்பட்டது. 18 மடங்கஎன் வல்வினைக் காட்டைநின் மன்அருள் தீக்கொளுவும் விடங்கஎன் றன்னை விடுதிகண் டாய்என் பிறவியைவே ரொடுங்களைந் தாண்டுகொள் உத்தர கோசமங் கைக்கரசே கொடுங்கரிக் குன்றுரித் தஞ்சுவித் தாய்வஞ்சிக் கொம்பினையே. பதப்பொருள் : உத்தர கோச மங்கைக்கு - திருவுத்தரகோச மங்கைக்கு, அரசே - தலைவனே, கொடுங்கரிக்கன்று உரித்து - கொடிய யானையாகிய மலையினை உரித்து, வஞ்சிக் கொம்பினை - வஞ்சிக் கொடி போன்ற உமையம்மையை, அஞ்சுவித்தாய் - அஞ்சுவித்தவனே, என் வல்வினைக்காட்டை - எனது கொடிய வினையாகிய காட்டினை, மடங்க - அழியும்படி, நின் மன் அருள் - உனது நிலைபெற்ற அருளாகிய, தீக்கொளுவும் - நெருப்பையிட்டு எரிக்கின்ற, விடங்க - வீரனே, என்றன்னை விடுதி - என்னை விட்டுவிடுவாயோ? என் பிறவியை - எனது பிறவியாகிய மரத்தை, வேரொடும் களைந்து - வேரொடுங் களைந்து, ஆண்டுகொள் - ஆட்கொண்டருள்வாயாக. விளக்கம் : இறைவன் உலகத்தார்க்கு அருளும்பொருட்டுக் குன்று போன்ற யானையை அழித்து, அதன் ஆற்றலை அடக்கினான் என்பார், 'கொடுங்கரிக் குன்றுரித்து' என்றார். அது போலத் தமக்கு அருளுதற்பொருட்டுத் தம்முடைய வினையாகிய காட்டை அழித்து, அதன் வலிமையை அடக்குவான் என்பார், 'மடங்க என் வல்வினைக் காட்டை நின் மன் அருள் தீக்கொளுவும் விடங்க' என்றார். கரிக்குன்றுரித்தது : கயமுகாசுரன் என்ற அசுரன் பிரமனை நோக்கித் தவம் செய்து சிவபிரான் தவிர மற்ற ஒருவராலும் அழியா வரம் பெற்று, நல்லோர்களைத் துன்புறுத்தி வந்தான். அவனது கொடுமைக்கு அஞ்சிய முனிவர்கள் காசியிற்சென்று சிவபிரானை அடைக்கலம் புக்கனர். அங்கும் சென்ற கயமுகாசுரனைச் சிவபிரான் பிரளய கால உருத்திர வடிவம் கொண்டு அழித்து, அவன் தோலைப் போர்த்தருளினன். இதனால், இறைவனது அருளாகிய தீ, அடியாரது வினையாகிய காட்டை அழிக்கும் என்பது கூறப்பட்டது. 19
|