230


கொம்பரில் லாக்கொடி போல்அல மந்தனன் கோமளமே
வெம்புகின் றேனை விடுதிகண் டாய்விண்ணர் நண்ணுகில்லா
உம்பருள் ளாய்மன்னும் உத்தர கோசமங் கைக்கரசே
அம்பர மேநில னேஅனல் காலொடப் பானவனே.

பதப்பொருள் : விண்ணர் நண்ணுகில்லா - தேவர்களும் அணுகக் கூடாத, உம்பர் உள்ளாய் - மேலிடத்திருப்பவனே, மன்னும் - நிலை பெற்ற, உத்தர கோச மங்கைக்கு - திருவுத்தரகோச மங்கைக்கு, அரசே தலைவனே, அம்பரமே - ஆகாயமே, நிலனே - பூமியே, அனல்காலொடு - நெருப்பு, காற்று என்பவற்றோடு, அப்பு ஆனவனே - நீரும் ஆனவனே, கோமளமே - இளமை நலமுடையோனே, (யான்) கொம்பர் இல்லா - கொழு கொம்பில்லாத, கொடிபோல் - கொடியைப் போல், அலமந்தனன் - சுழன்றேன்; வெம்புகின்றேனை - இவ்வாறு மேலிடுகின்ற என்னை, விடுதி - விட்டுவிடுவாயோ!

விளக்கம் : இந்திரன் முதலிய தேவர் இருக்கும் உலகம் வேறு, சிவபெருமான் வாழும் இடம் வேறு. அது சிவலோகம் எனப்படும். அஃது எல்லாப் பதங்களுக்கும் மேலாய பதமாதலின், 'விண்ணர் நண்ணுகில்லா உம்பருள்ளாய்' என்றார்.

கொழுகொம்பு - கொடிகள் பற்றியேறிப் பந்தலிற்படர்தற்கு நடும் கொம்பு. தாவிப் படர்வதற்குக் கொம்பு இல்லையென்றால், கொடி சுழன்று வாடும். அதைப் போல அலைந்து வாடுகின்றேன், எனக்கு அருள் செய்ய வேண்டும் என்பார், 'அலமந்தனன் வெம்புகின்றேனை விடுதிகண்டாய்' என்றார்.

இதனால், இறைவன் தன்னைச் சார்ந்த அடியார்க்குக் கொழு கொம்பு போல இருந்து உதவுவான் என்பது கூறப்பட்டது.

20

ஆனைவெம் போரிற் குறுந்தூ றெனப்புல னாலலைப்புண்
டேனைஎந் தாய்விட் டிடுதிகண் டாய்வினை யேன்மனத்துத்
தேனையும் பாலையும் கன்னலை யும்அமு தத்தையும்ஒத்
தூனையும் என்பினை யும்உருக் காநின்ற ஒண்மையனே.

பதப்பொருள் : எந்தாய் - என் அப்பனே, வினையேன் மனத்து - தீவினையேனது உள்ளத்தின்கண், தேனையும் - தேனினையும், பாலையும் - பாலினையும், கன்னலையும் - கருப்பஞ்சாற்றையும், அமுதத்தையும் - அமுதத்தினையும், ஒத்து - நிகர்த்து (இனிமையாயிருந்து), ஊனையும் - உடம்பையும், என்பினையும் - உடம்புள்ளிருக்கும் எலும்பையும், உருக்காநின்ற - உருகப்பண்ணுகிற, ஒண்மையனே - ஒளியுடையோனே, ஆனை வெம்போரில் - யானையினது கொடிய சண்டையில் அகப்பட்ட, குறுந்தூறு என - சிறு புதர் போல, புலனால் - ஐம்புலன்களால்,