231


அலைப்புண்டேனை - அலைக்கப்பட்ட என்னை, விட்டிடுதி - விட்டுவிடுவாயோ!

விளக்கம் : ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்குவான் இறைவனாகலின் 'ஊனையும் என்பினையும் உருக்காநின்ற ஒண்மையனே' என்றார். யானைப்போரில் சிறு புதர்கள் அவற்றின் காலிற்பட்டுச் சிதையும். அதைப் போல, ஐம்புல ஆசைப் போரில் அகப்பட்டுத் துன்புறுகின்கிறேன் என்பார், 'ஆனை வெம்போரிற் குறுந்தூ றெனப் புலனால் அலைப்புண்டேனை' என்றார்.

இதனால், ஐம்புல ஆசை வயப்பட்டோர் துன்பம் எய்துவர் என்பது கூறப்பட்டது.

21

ஒண்மைய னேதிரு நீற்றைஉத் தூளித் தொளிமிளிரும்
வெண்மைய னேவிட் டிடுதிகண் டாய்மெய் யடியவர்கட்
கண்மைய னேஎன்றும் சேயாய் பிறர்க்கறி தற்கரிதாம்
பெண்மைய னேதொன்மை ஆண்மைய னேஅலிப் பெற்றியனே.

பதப்பொருள் : ஒண்மையனே - ஒளிப்பிழம்பாய் உள்ளவனே, திருநீற்றை உத்தூளித்து - திருவெண்ணீற்றை நிறையப் பூசி, ஒளி மிளிரும் வெண்மையான - அந்நீற்றொளியால் விளங்கும் வெண்ணிறமுடையவனே, மெய் அடியவர்கட்கு - மெய்யடியார்க்கு, அண்மையனே, பக்கத்தில் இருப்பவனே, பிறர்க்கு என்றும் சேயாய் - அடியரல்லாத ஏனையோர்க்கு எக்காலத்தும் தூரத்தில் இருப்பவனே, அறிதற்கு அரிதாம் - அறிதற்கரியதாகிய பொருளாய் இருப்பவனே, பெண்மையனே - பெண்ணாய் இருப்பவனே, தொன்மை - பழமையானவனே, ஆண்மையனே - ஆணாய் இருப்பவனே, அலிப்பெற்றியனே - அலித்தன்மையாய் இருப்பவனே, விட்டிடுதி - என்னை விட்டுவிடுவாயோ!

விளக்கம் : இறைவன் செம்மேனியம்மானாதலின், 'ஒண்மையனே' என்றார். நீர் கலவாத பொடியை உடல் முழுவதும் பூசுதல் உத்தூளனமாகப் பூசுதலாம். 'அறிதற்கரிதாம்' என்றதும், 'தொன்மை' என்றதும் இறைவனையே ஆகையால் அவ்வாறு பொருள் உரைக்கப்பட்டது. உலகத்தை ஆண் பெண் அலி என்ற முப்பிரிவில் அடக்கலாம். இறைவன் எல்லாப் பொருள்களிலும் தங்கி இருத்தலின், 'பெண்மையனே, ஆண்மையனே, அலிப் பெற்றியனே' என்றார்.

இதனால், இறைவன் எல்லாப் பொருளுமாய் இருப்பவன் என்பது கூறப்பட்டது.

22