பெற்றது கொண்டு பிழையே பெருக்கிச் சுருக்குமன்பின் வெற்றடி யேனை விடுதிகண் டாய்விடி லோகெடுவேன் மற்றடி யேன்றன்னைத் தாங்குநர் இல்லைஎன் வாழ்முதலே உற்றடி யேன்மிகத் தேறிநின் றேன்எனக் குள்ளவனே. பதப்பொருள் : என் வாழ்முதலே - என் வாழ்க்கைக்குக் காரணமான முதற்பொருளே, எனக்கு உள்ளவனே - எனக்குப் பற்றுக்கோடாய் உள்ளவனே, உற்று - உன்னை விட்டு விலகியதனால் வரும் துன்பத்தை அனுபவித்து, அடியேன் மிகத் தேறி நின்றேன் - அடியேன் இவ்வுலகம் இத்தன்மையது என்பதை மிகவும் தெளிவாக அறிந்து நின்றேன்; (இனியும்) பெற்றது கொண்டு - எனக்கு இவ்வுலகத்தில் கிடைத்ததைப் பற்றிக்கொண்டு, பிழையே பெருக்கி - குற்றத்தையே பெருகச் செய்து, சுருக்கும் அன்பின் - அன்பைச் சுருங்கச் செய்கின்ற, வெற்றடியேனை - பயனற்ற அடியேனை, விடுதி - விட்டு விடுவாயோ! விடிலோ - விட்டுவிட்டாலோ, அடியேன்றன்னை - அடியேனை, தாங்குநர் - தாங்குவோர், மற்று இல்லை - வேறு ஒருவரும் இல்லை, கெடுவேன் - அதனால் நான் அழிவேன். விளக்கம் : உலகம் துன்பமானது என்பது உன்னைப் பிரிந்த பின்பே தெளிவாக விளங்கிற்று என்பார், 'உற்றடியேன் மிகத் தேறி நின்றேன்' என்றார். 'உற்றலாற் கயவர் தேறார் என்னுங் கட்டுரையோ டொத்தேன்' என்ற திருநாவுக்கரசர் வாக்கு இங்கு நினைக்கத் தக்கது. உடம்பு முதலியவற்றைத் துணையாகக்கொண்டு அன்பைப் பெருக்கிப் பிழையைச் சுருக்க வேண்டும். அவ்வாறு செய்யாது அவற்றால் மயங்கிப் பிழையே பெருக்கி அன்பைச் சுருக்குகின்றேன் என்று வருந்துவார், 'பெற்றது கொண்டு பிழையே பெருக்கிச் சுருக்கு மன்பின் வெற்றடியேன்' என்றார். ஆயினும், இறைவனே வாழ்முதலாகையால், வேறு ஒருவரும் தாங்குவதற்கு இல்லை என்பார், 'அடியேன்றன்னைத் தாங்குநர் இல்லை என் வாழ்முதலே' என்றார். ஆதலால், கைவிடலாகாது என்பார், 'விடுதி கண்டாய்' என்றார். இதனால், இறைவனே எல்லா உயிர்களுக்கும் ஆதாரமாயிருந்து காக்கிறான் என்பது கூறப்பட்டது. 23 உள்ளன வேநிற்க இல்லன செய்யுமை யல்துழனி வெள்ளன் அலேனை விடுதிகண் டாய்வியன் மாத்தடக்கைப் பொள்ளநல் வேழத் துரியாய் புலன்நின்கண் போதலொட்டா மெள்ளென வேமொய்க்கும் நெய்க்குடந் தன்னை எறும்பெனவே.
|