பதப்பொருள் : வியன் மாதடக்கை - மிகவும் பெரிய நீண்ட துதிக்கையின்கண், பொள்ளல் - துளையினையுடைய, நல்வேழத்து உரியாய் - அழகிய யானையின் தோலையுடையானே, புலன் - ஐம்புலன்களும், நின்கண் போதல் ஒட்டா - உன்பால் செல்ல ஒட்டாமல், நெய்க்குடந்தன்னை எறும்பு என - நெய்க்குடத்தை எறும்பு மொய்ப்பது போல, மெள்ளென மொய்க்கும் - என்னை மெல்லென மொய்க்கின்றன; (அதனால்) உள்ளன நிற்க - உண்மையானவை இருக்க, இல்லனவே செய்யும் - பொய்யாயினவற்றையே செய்கிற, மையல் துழனி - மயக்கத்தையும் ஆரவாரத்தையும் உடைய, வெள்ளன் அலேனை - தூயவன் அல்லாதவனாகிய என்னை, விடுதி - விட்டுவிடுவாயோ! விளக்கம் : நெய், அதனை வைத்தவர்களுக்கு உணவாகப் பயன்பட வேண்டுவது. ஆனால், எறும்புகள் மொய்த்து அதைத் தமக்கு உணவாக்கிக்கொள்ள முயல்கின்றன. அது போல, எனது அறிவு ஆண்டவனாகிய உன்னை அறிவதற்குப் பயன்பட வேண்டுவது. அதனை ஐம்புலன்கள் மொய்த்துத் தன் வசப்படுத்த முயல்கின்றன என்பது, 'நெய்குடந்தன்னை எறும்பெனவே' என்னும் உவமையால் அறியப்படும். என்றும் அழியாமையால் மெய்யை உள்ளன என்றும், அழிவுடைமையால் பொய்யை இல்லன என்றும் கூறினார். வெண்மை தூய்மையைக் காட்டலால், வெள்ளன் என்பதற்குத் தூய்மையன் என்று பொருள் கொள்ளப்பட்டது. 'கள்ளரோ புகுந்தீரென்னக் கலந்துதானோக்கி நக்கு, வெள்ளரோ மென்று நின்றார் விளங்கிளம் பிறையனாரே' என்ற திருநாவுக்கரசர் தேவாரத்தில் 'வெள்ளரோம்' என்பது, 'கள்வர் அல்லோம்' என்ற பொருளில் வந்திருப்பதைக் காண்க. இதனால், ஐம்புல ஆசை இறைவனது திருவடியைச் சேரவிடாது தடுக்கும் என்பது கூறப்பட்டது. 24 எறும்பிடை நாங்கூ ழெனப்புல னாலரிப் புண்டலந்த வெறுந்தமி யேனை விடுதிக்கண் டாய்வெய்ய கூற்றொடுங்க உறுங்கடிப் போதவை யேஉணர் வுற்றவர் உம்பரும்பர் பெறும்பத மேஅடி யார்பெய ராத பெருமையனே. பதப்பொருள் : வெய்ய கூற்று ஒடுங்க - கொடிய இயமன் ஒடுங்கும்படி, உறும் - அவன்மேல் பொருந்திய, கடிப்போது அவையே - மணம் நிறைந்த தாமரை மலர்களையொத்த உன் திருவடிகளாகிய அவற்றையே, உணர்வுற்றவர் - அழுந்தி அறிந்தவர்கள், பெறும் - பெறுகின்ற, உம்பர் உம்பர் - மிக மேலான,
|