234


பதமே - பதவியாய் உள்ளவனே, அடியார் - அடியவராயினார், பெயராத பெருமையனே - பின்பு உன்னைவிட்டு நீங்காத பெருமையுடையவனே, எறும்பு இடை - பல எறும்புகட்கு இடையே அகப்பட்ட, நாங்கூழ் என - நாகப்பூச்சி அரிப்புண்டு வருந்தினாற்போல, புலனால் - புலன்களிடையே அகப்பட்டு, அலந்த - அரித்துத் தின்னப்பட்டு வருந்தின, வெறுந்தமியேனை - பயனில்லாத தனியேனை, விடுதி - விட்டுவிடுவாயோ?

விளக்கம் : வெய்ய கூற்றை ஒடுக்கியது திருவடியாதலால் கடிப்போது என்றதற்கு மணம் நிறைந்த திருவடி என்று பொருள் கொள்ளப்பட்டது. போது என்பது உருவகம். சிவபதம் தேவர் பதங்களுக்கும் மேலாகிய பதமாதலாலே, 'உம்பர் உம்பர் பதமே' என்றார். சிவத்தை அடைந்தவர் பிரிய விரும்ப மாட்டாராதலாலே, 'அடியார் பெயராத பெருமையனே' என்று அழைத்தார். 'மேவினார் பிரியமாட்டா விமலனார்' என்ற பெரிய புராணத்தையுங்காண்க.

ஒரு நாங்கூழ்ப் புழுவைப் பல எறும்புகள் பற்றி அரித்துத் தின்ன, அப்புழு அவற்றிடையே அகப்பட்டுத் துடித்து அழிவது போல, ஒருவனாகிய என்னை ஐந்து புலன்களும் பற்றியிழுத்து வருத்த, யான் அவற்றிடையே அகப்பட்டு வருந்திக் கெடுகின்றேன் என்பார், 'எறும்பிடை நாங்கூழெனப் புலனால் அரிப்புண் டலந்த வெறுந்தமியேன்' என்றார். முன் பாட்டில் உயிரை ஐம்புலன்கள் சூழ்வதை மட்டும் குறித்தார். இதில், ஓர் உயிரை ஐந்து புலன்கள் பற்றி வருத்திக் கெடுப்பதைக் குறித்தார்.

இதனால், ஐம்புலன்கள் உயிரைப் பல துறைகளில் ஈர்த்துத் துன்புறுத்தும் என்பது கூறப்பட்டது.

25

பெருநீ ரறச்சிறு மீன்துவண் டாங்கு நினைப்பிரிந்த
வெருநீர்மை யேனை விடுதிகண் டாய்வியன் கங்கைபொங்கி
வருநீர் மடுவுள் மலைச்சிறு தோணி வடிவின்வெள்ளைக்
குருநீர் மதிபொதி யுஞ்சடை வானக் கொழுமணியே.

பதப்பொருள் : வியன் கங்கை - பெரிய கங்கையாகிய, பொங்கி வருநீர் மடுவுள் - பெருகுகின்ற நீரையுடைய பள்ளத்துள், மலை - எதிர்த்து நிற்றலையுடைய, சிறுதோணி வடிவின் - சிறிய தோணியின் தோற்றம் போல, வெள்ளைக் குருநீர் - வெண்மை நிறமும் குளிர்ச்சியும் பொருந்திய, மதி - பிறைச்சந்திரன், பொதியும் - தவழ்கின்ற, சடை - சடையினுடைய, வானம் - பரமாகாயத்திலுள்ள, கொழுமணியே - செழுமையாகிய மாணிக்கமே, பெருநீர் அற - மிகுந்த நீரானது வற்றிப்போக, சிறுமீன் துவண்டாங்கு - சிறிய மீன்கள் வாடினாற்போல, நினைப் பிரிந்த - உன்னை விட்டு நீங்கின, வெரு நீர்மையேனை - அஞ்சுதலாகிய குணத்தையுடைய என்னை, விடுதி - விட்டு விடுவாயோ!