விளக்கம் : கங்கைக் கரையிலே தோணி நிற்பது போல இறைவனது சடையிலுள்ள கங்கையின் அருகே பிறை உள்ளது என்பார், 'தோணி வடிவின் வெள்ளைக் குருநீர்மதி' என்றார். பிறைச்சந்திரனுக்கு அடைக்கலம் தந்து காத்தது போலத் தம்மையும் காக்க வேண்டும் என்பார், 'மதி பொதியுஞ்சடை வானக் கொழு மணியே' என்று விளித்தார். நீரிலிருந்து நீங்கிய மீன்கள் வாடும்; அதைப் போல, உன்னைப் பிரிந்த நான் வாடுகின்றேன் என்பார், 'பெருநீரறச் சிறு மீன் துவண்டாங்கு நினைப்பிரிந்த வெருநீர்மையேனை' என்றார். வெருவுதல் - உலகத் துன்பம் நோக்கி அஞ்சுதல். இதனால், இறைவன் அருள் வெள்ளத்தை நீங்கினவர் நீர் வெள்ளத்தை நீங்கின மீன் போல் வாடுவர் என்பது கூறப்பட்டது. 26 கொழுமணி ஏர்நகை யார்கொங்கைக் குன்றிடைச் சென்றுகுன்றி விழுமடி யேனை விடுதிகண் டாய்மெய்ம் முழுதுங்கம்பித் தழுமடி யாரிடை ஆர்த்துவைத் தாட்கொண் டருளிஎன்னைக் கழுமணி யேஇன்னும் காட்டுகண் டாய்நின் புலன்கழலே. பதப்பொருள் : மெய் முழுவதும் - உடல் முழுவதும், கம்பித்து - நடுங்கப்பெற்று, அழும் - அழுகின்ற, அடியார் இடை - அடியார் நடுவே, என்னை ஆர்த்து வைத்து - என்னைப் பொருத்தி வைத்து, ஆட்கொண்டருளி - அடிமை கொண்டருளி, கழுமணியே - தூய்மை செய்த மாணிக்கமே, கொழுமணி - செழுமையாகிய முத்துப் போன்ற, ஏர் - அழகிய, நகையார் - பல்லினையுடைய மாதராரது, கொங்கைக் குன்றிடை - தனங்களாகிய இருகுன்றுகளின் நடுவில், சென்று - போய், குன்றி விழும் அடியேனை - மயங்கி விழுகின்ற அடியேனை, விடுதி - விட்டுவிடுவாயோ! இன்னும் - இனியும் முன் போல, நின் புலன் கழல் - உனது ஞானமாகிய திருவடியை, காட்டு - அடியேனுக்குக் காட்டுவாயாக. விளக்கம் : திருப்பெருந்துறையில் கண்ட கோலத்தை மீண்டும் திருவுத்தரகோச மங்கையில் காண விழைகின்றாராதலின், 'இன்னும் காட்டு கண்டாய் நின்புலன் கழலே' என்றார். புலன் - ஞானம். நகைக்கு உவமையாகப் புணர்க்கப்பட்டமையால் மணி் என்பது முத்தை உணர்த்திற்று. இதனால், மாதராராசை மயக்கத்தை இறைவனது திருவருளே தீர்க்க வல்லது என்பது கூறப்பட்டது. 27 புலன்கள் திகைப்பிக்க யானும் திகைத்திங்கொர் பொய்ந்நெறிக்கே விலங்குகின் றேனை விடுதிகண் டாய்விண்ணும் மண்ணுமெல்லாம் கலங்கமுந் நீர்நஞ் சமுதுசெய் தாய்கரு ணாகரனே துலங்குகின் றேன்அடி யேன்உடை யாய்என் தொழுகுலமே.
|