பதப்பொருள் : விண்ணும் மண்ணும் எல்லாம் - விண்ணுலகமும் மண்ணுலகமும் முழுவதும், கலங்க - அஞ்சிக் கலக்கமுற்ற போது, முந்நீர் - கடலில் எழுந்த, நஞ்சு - விடத்தை, அமுது செய்தாய் - அமுதமாக உண்டவனே, கருணாகரனே - அருட்கடலே, உடையாய் - என்னை ஆளாக உடையவனே, என் தொழுகுலமே - என் வேதியனே, அடியேன் துலங்குகின்றேன் - அடியேன் பிறப்புக்கு அஞ்சி நடுங்குகின்றேன், புலன்கள் - ஐம்புலன்களும், திகைப்பிக்க - திகைக்கச் செய்ய, யானும் திகைத்து - நானும் திகைப்பை அடைந்து, இங்கு - இவ்விடத்தில், ஒர் - ஒரு, பொய் நெறிக்கே - பொய் வழியிலே, விலங்குகின்றேனை - உன்னை விட்டு விலகித் திரிகின்ற என்னை, விட்டு - விட்டுவிடுவாயோ! விளக்கம் : முந்நீர் - மூன்று நீர். அவை ஆற்றுநீர், மழைநீர், ஊற்றுநீர் என்பன. அன்றிப் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தன்மைகளையுடைமையால் முந்நீர் எனப்பட்டது என்றும் கூறுவர். நஞ்சை அமுதாக உண்டு தேவர்களைக் காப்பாற்றியமையால் 'கருணாகரன்' என்றார். 'பொய்யையும் மெய்யாக நீ மாற்றுதல் கூடும்' என்ற குறிப்பும் இதனால் விளங்கும். அந்தணனாகி ஆண்டனன் ஆதலின், 'என் தொழுகுலமே' என்றார். நிலையாதவற்றை நிலையின என்று உணர்வது பொய்ந்நெறி. பொய்ந்நெறியில் செல்கின்றமை நோக்கிக் கைவிடலாகாது என்பார், 'பொய்ந்நெறிக்கே விலங்குகின்றேனை விடுதி கண்டாய்' என்றார். இதனால், அடியார்களது குற்றத்தைப் பொறுத்து ஆட்கொள்ளும் அருளுடையவன் இறைவன் என்பது கூறப்பட்டது. 28 குலம்களைந் தாய்களைந் தாய்என்னைக் குற்றம்கொற் றச்சிலையாம் விலங்கல்எந் தாய்விட் டிடுதிகண் டாய்பொன்னின் மின்னு அலங்கலம் தாமரை மேனிஅப் பாஒப் பிலாதவனே (கொன்றை மலங்கள்ஐந் தாற்சுழல் வன்தயி ரிற்பொரு மத்துறவே. பதப்பொருள் : பொன்னின் மின்னு - பொன் போல மின்னுகின்ற, கொன்றை அலங்கல் - கொன்றை மாலை அணிந்த, அம் - அழகிய, தாமரை - செந்தாமரை மலர் போன்ற, மேனி - திருமேனியையுடைய, அப்பா - அப்பனே, ஒப்பு இல்லாதவனே - ஒப்பற்றவனே, குலம் களைந்தாய் - என் சுற்றத்தொடர்பை அறுத்தவனே, என்னைக் குற்றம் களைந்தாய் - என்னைக் குற்றத்தினின்றும் நீக்கினவனே, கொற்றச் சிலையாம் - வெற்றி வில்லாகிய, விலங்கல் - மேருவையுடைய, எந்தாய் - எந்தையே, பொரும் மத்து உற - கடைகின்ற மத்துப் பொருந்தினவுடன், தயிரின் - சுழல்கின்ற தயிர் போல, மலங்கள் ஐந்தால் - ஐந்து மலங்களாலும், சுழல்வன் - அலைவுற்று வருந்துவேன், விட்டுதி - என்னை விட்டுவிடுவாயோ!
|