238


என்பதைக் காட்டுகின்றன. சச்சு - இளமை. 'சத்து' என்பதன் போலியாகக் கொண்டு உண்மைப் பொருளானவனே என்றும் பொருள் கூறலாம்.

மத்தினால் கடையப்பட்ட தயிர் கலங்கும்; அதைப் போல, ஐம்புல ஆசைகளால் தாக்கப்பட்ட உயிர் கலங்கும் என்பார், 'மத்துறு தண்டயிரிற் புலன் தீக்கதுவக் கலங்கி' என்றார். முன்னைய திருப்பாட்டில் உயிர் மல சம்பந்தத்தினால் பல பிறவிகளில் சென்று உழலும் என்பதும், இத்திருப்பாட்டில் உயிர் புலன்களின் சேர்க்கையால் இப்பிறவியிலேயே கலங்கித் துன்புறும் என்பதும் உவமையால் விளங்காநின்றன.

இதனால், ஐம்புல ஆசையால் உண்டாகும் கலக்கத்தைப் போக்கி அருளுவான் இறைவன் என்பது கூறப்பட்டது.

30

சச்சைய னேமிக்க தண்புனல் விண்கால் நிலம்நெருப்பாம்
விச்சைய னேவிட் டிடுதிகண் டாய்வெளி யாய்கரியாய்
பச்சைய னேசெய்ய மேனிய னேஒண் படஅரவக்
கச்சைய னேகடந் தாய்தடந் தாள அடற்கரியே.

பதப்பொருள் : சச்சு ஐயனே - இளமையுடைய தலைவனே, மிக்க தண்புனல் - மிக்க குளிர்ச்சியுள்ள நீரும், விண் - ஆகாயமும், கால் - காற்றும், நிலம் - நிலமும், நெருப்பும் - தீயும், ஆம் - ஆக நிற்கின்ற, விச்சையனே - வித்தையையுடையவனே, வெளியாய் - வெண்மை நிறமுடையவனே, கரியாய் - கருமை நிறமுடையவனே, பச்சையனே - பசுமை நிறமுடையவனே, செய்ய மேனியனே - செம்மேனியுடையவனே, ஒள் - அழகிய, படம் - படத்தையுடைய, அரவம் - பாம்பாகிய, கச்சையனே - அரைக் கச்சினை அணிந்தவனே, தடம் தாள - பெரிய அடிகளையுடைய, அடல் கரி - வலி அமைந்த யானையை, கடந்தாய் - வென்றவனே, விட்டிடுதி - விட்டுவிடுவாயோ!

விளக்கம் : இறைவன் ஐம்பெரும்பூதங்களாய் இருக்கிறான் என்பார், 'புனல் விண் கால்நில நெருப்பாம் விச்சையனே' என்றார். உருவமில்லாத பெருமான் உருவமாய்த் தோன்றுவது அற்புதமாதலாலே, 'விச்சையனே' என்றார். இறைவன் ஐந்து தொழில்களை இயற்ற ஐந்து மூர்த்திகளாய் இருத்தலை, 'வெளியாய் கரியாய் பச்சையனே செய்ய மேனியனே' என்றார். இவை இறைவனது ஈசானம் முதலிய ஐந்து முகங்களைக் குறித்தன எனலுமாம். நான்கைக் கூறி ஐந்தை உள்ளடக்கினார். 'நிறங்களோர் ஐந்துடையாய்' என்று முன்னரும் கூறினார். 'படத்தை உடைய அரவத்தைக் கச்சாக அணிதலும், வலியமைந்த யானையை வெல்லுதலும் போன்று தம்மைத் தளரவிடாது காக்கும் செயற்கரிய செயலையும் செய்தல் வேண்டும் என்பதாம்.

இதனால், இறைவனது எல்லாம் வல்ல தன்மை கூறப்பட்டது.

31